Paristamil Navigation Paristamil advert login

வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று; விஜய்

வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று; விஜய்

20 ஐப்பசி 2024 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 472


அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி' என தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார்.

இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும். அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.

அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

முக்கியம்
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்.

அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம்.

கடமை, கண்ணியம்
பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்