தெலுங்கானா அரசுக்கு அதானி ரூ.100 கோடி நன்கொடை
21 ஐப்பசி 2024 திங்கள் 03:43 | பார்வைகள் : 1496
தெலுங்கானா அரசுக்கு பிரபல தொழிலதிபர் அதானி ரூ.100 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.,- பி.ஆர்.எஸ்., ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
தெலுங்கானாவை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சி எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், பிரபல தொழிலதிபர் அதானியை பா.ஜ., உடனும், பிரதமர் மோடியுடனும் தொடர்புபடுத்தி தேர்தல் பிரசாரத்தின் போதும், பொதுக்கூட்டங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் விமர்சித்து வருகிறார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் எதிரொலித்து வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், அதானி, தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் இளைஞர்களுக்கு தொழில்துறை திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குவதற்காக அமைக்கப்படும் பல்கலைக்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்குவதற்கான காசோலையை அதானி வழங்கினார். அதனை ரேவந்த் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
தற்போது, இதனை வைத்து அம்மாநில எதிர்க்கட்சிகளான பாரதிய ராஷ்ட்ரீய சமீதி(பி.ஆர்.எஸ்.,) மற்றும் பா.ஜ., கட்சிகள் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அக்கட்சி இரட்டை வேடம் போடுவதாக சாடி உள்ளன.
இது தொடர்பாக பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தினமும் அதானி அதானி என ராகுல் பேசி வருகிறார். இதனையும் மீறி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதானியிடம் இருந்து நன்கொடையை பெற்றுக் கொண்டார். உங்கள் சொந்த முதல்வரே அவரை மதிக்கவில்லை. அவரை யாரும் 'சீரியசாக' எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு அந்த பதிவில் அமித் மாளவியா கூறியுள்ளார்.
பிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவர் கேடி ராமராவ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஒரு புறம் ராகுலும், காங்கிரசும், பிரதமர் மோடி, அதானியை நண்பர்கள் எனக்கூறி அவர்களின் நட்பை விமர்சித்து வருகிறது. ஆனால், தெலுங்கானாவில், ரேவ்ந்த் மற்றும் அதானியை இணைந்து ரேவ்தானி(Revdani)யாக பார்க்கிறோம். அல்லது ராகுல் மற்றும் அதானியை சேர்த்து ராகாதானி(Ragadani) ஆக பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.