முதல்வர் பதவி, திருமாவளவன் - முருகன் மோதல்: குளிர்காயும் சீமான்
21 ஐப்பசி 2024 திங்கள் 03:45 | பார்வைகள் : 1429
முதல்வர் பதவி கோஷம், அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, திருமாவளவனுக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், குளிர்காயும் வகையில், 'திருமாவளவனை முதல்வராக்க நான் தயார்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பட்டியலின பிரிவில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2009ல் தி.மு.க., ஆட்சியில், 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோர் எதிர்த்தனர். சில கட்சிகள் சார்பில், இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அருந்ததியர் சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட, 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என அங்கீகரித்து, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட்டில் தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அருந்தியருக்கான உள்ஒதுக்கீட்டை, தி.மு.க., அரசு கொண்டு வந்ததால், அக்கட்சி கூட்டணியில் உள்ள திருமாவளவன், தற்போது தீவிரமாக எதிர்ப்பு காட்டவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு பேட்டி ஒன்றில், 'திருமாவளவனை தமிழக முதல்வராக்குவது எங்கள் கனவு' என்றார்.
அவருக்கு பதிலடி தரும் வகையில், மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி: திருமாவளவன் முதல்வராகும் கனவு நடக்காது. தி.மு.க., கூட்டணி, திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்குமா என்பதெல்லாம் அக்கட்சி எடுக்க வேண்டிய முடிவு. சமூக நீதி குறித்து பேச, திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. இந்த விவகாரத்தில் அவர் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் எப்படி, ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும். சிறிய கட்சியின் தலைவராகவே அவரை பார்க்கிறேன். ஒட்டு மொத்த தலித் மக்களை, அவர் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதேநேரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளார். அவரது பேட்டி: திருமாவளவனுக்கு முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. அவரை நாங்கள் ஆதரிப்போம்; அவரை எப்படியாவது நாங்கள் முதல்வராக்குவோம். இதில், என்னை விட மகிழ்ச்சி அடையும் நபர், வேறு யாரும் இருக்க முடியாது. கனவு பலிக்காது என்று சொல்வதற்கு முருகன் யார்? அவர் இரண்டு முறை மத்திய அமைச்சராகும் போது, திருமாவளவனால் தமிழக முதல்வராக முடியாதா? இவ்வாறு சீமான் கூறினார்.
முதல்வர் கனவு, அருந்தியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், முருகனுக்கும், திருமாவளவனுக்கும் இடையேயான மோதலில், குளிர் காயும் வகையில், சீமான் திருமாவளவனுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதன் வாயிலாக நாம் தமிழர் கட்சிக்கு, தேவேந்திர குல வேளாளர் மற்றும் பட்டியலின சமுதாயத்தின் ஓட்டுகளை வளைக்க, சீமான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.