முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு சிக்கல்
21 ஐப்பசி 2024 திங்கள் 03:50 | பார்வைகள் : 1461
தமிழக எல்லையை ஒட்டியுள்ள சோமனஹள்ளி என்ற இடத்தில், சர்வதேச விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசு தீர்மானித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில் நகரான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில், கர்நாடகா எடுத்துள்ள இந்த முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
70 கி.மீ., இடைவெளி
ஓசூருக்கும், சோமனஹள்ளிக்கும் இடையிலான துாரம், 50 கிலோ மீட்டருக்கும் குறைவு. அதேசமயம், பெங்களூரின் வடபகுதியில் தற்போது செயல்படும் சர்வதேச விமான நிலையத்துக்கும், சோமனஹள்ளிக்கும், 70 கி.மீ.,க்கு மேல் இடைவெளி உள்ளது.
ஒரே நகரில் இரண்டு விமான நிலையங்கள் அமையும் போது, 50 கி.மீ.,க்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரை. அப்படி பார்த்தால், கர்நாடகா அரசு தேர்வு செய்துள்ள சோமனஹள்ளி மிகவும் பொருத்தமானது என்கின்றனர், அதிகாரிகள்.
பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பது என, பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசு முடிவு செய்து விட்டது.
வேகம் காட்டவில்லை
ஆனால், தற்போதுள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகத்துக்கும், கர்நாடக அரசுக்கும் உள்ள ஒப்பந்தப்படி, 2033 வரை, 150 கி.மீ., சுற்றளவில் இன்னொரு விமான நிலையம் அமைக்கக்கூடாது. இதனால், கர்நாடக அரசு வேகம் காட்டாமல் இருந்தது.
ஓசூரில், 2,000 ஏக்கரில் ஏர்போர்ட் அமைப்போம் என, சட்டசபையில் ஜூன் 27ம் தேதி ஸ்டாலின் அறிவித்ததும், கர்நாடகா சுதாரித்தது. ஆண்டுக்கு மூன்று கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக ஓசூர் விமான நிலையம் உருவாக்கப்படும் என, ஸ்டாலின் சொல்லி இருந்தார்.
தமிழக அரசின் கோரிக்கையை தொடர்ந்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் அதிகாரிகள், ஓசூரிலும் அதை சுற்றிலும் ஆய்வு செய்து, ஐந்து இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, கெம்பகவுடா விமான நிலைய நிர்வாகத்துடனும், ஓசூரில் தற்போது இயங்கி வரும் சிறிய விமான நிலையத்தின் நிர்வாகத்துடனும் தமிழக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதன் பின்னரே கர்நாடக அரசின் செயல் வேகம் பிடித்தது.
பெங்களூரை சுற்றிலும், ஐந்து இடங்களை பட்டியலிட்டு விவாதித்தனர். தெற்கு பெங்களூரில் ஹரோஹள்ளி, சோமனஹள்ளி, தென்மேற்கே பிடதி ஆகியவை ஆராயப்பட்டன. பிடதியில் நிலப்பரப்பு சமதளமாக இல்லாததால், அது பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டது. ஹரோஹள்ளியில் ஏற்கனவே தொழிற்சாலைகள் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், அதுவும் சரிப்படாது என்று முடிவு செய்தனர்.
பெங்களூருக்கு வடமேற்கே உள்ள குனிகல், தோப்ஸ்பெட் ஆகியவற்றை ஆராய்ந்த போது, கெம்பகவுடா விமான நிலையத்துக்கு மிக அருகில் உள்ளதால், இவையும் நிராகரிக்கப்பட்டன. சோமனஹள்ளியில் நிலம் எடுப்பது ஒரு பிரச்னையாக இருக்காது. ஏற்கனவே அங்கு, 3,000 ஏக்கர் திறந்த நிலம் இருக்கிறது. மேலும் 2,000 ஏக்கர் ஆர்ஜிதம் செய்வதில் சிரமம் இருக்காது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'சர்வதேச தரத்தில் 5,000 ஏக்கரில் விமான நிலையம் அமைப்பது நம் இலக்கு. தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் கட்டவிடாமல் தடுக்க நினைக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் நலனே அரசுக்கு முக்கியம்' என்று துணை முதல்வர் சிவகுமார் சொல்கிறார்.
இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைத்தால், ஓசூர் திட்டத்தை தமிழகம் கைவிடுவதை தவிர வழியில்லை. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை கர்நாடகா நிராகரித்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஓசூர் அதிவேகமாக வளர்ச்சி அடையும்; அதனால், பெங்களூரின் சர்வதேச முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற அச்சமே உண்மையான காரணம் என, வல்லுனர்கள் சொல்கின்றனர்.
ஓசூரில் விமான நிலையம் வந்தாலும், பெங்களூருக்கு அதே போன்ற பாதிப்பு நேரும். எனவே தான் அவசரமாக பெங்களூருக்கு தெற்கே, ஓசூரை ஒட்டிய சோமனஹள்ளியில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை, ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டி யாராவது பிரச்னை கிளப்பினால், சோமனஹள்ளியில் அமைக்க இருப்பது கெம்பேகவுடா ஏர்போர்ட்டின் விரிவாக்கம் என்று வாதிட கர்நாடக அரசு முன்வரலாம். தேவைப்பட்டால் ஒப்பந்தத்திலும் திருத்தம் செய்ய அந்த அரசு தயாராக உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.