சீமான் அப்படி சொல்லவில்லை; திராவிடம்-தமிழினம் குறித்து திருமா புது விளக்கம்
21 ஐப்பசி 2024 திங்கள் 12:26 | பார்வைகள் : 1223
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் வழிகாட்டுதலின்படி, வி.சி.க., மீது திட்டமிட்டே அவதூறு பரப்புவதாக வி.சி.க., தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்தை எடுத்து விடுவேன் என்று சீமான் சொல்லவில்லை. அதுக்கு பதிலாக இன்னும் ஒரு சிறப்பான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்கிறார். அவருக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால், அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.
திராவிடம் என்பது மரபினம். தமிழர் என்பது தேசிய இனம். மரபினத்துக்குள்ளே இருக்கும் பல்வேறு தேசிய இனத்தில் ஒன்று தான் தமிழ் இனம். அதனை வெவ்வேறு படுத்தி பார்க்கக் கூடாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, திராவிடம் என்றால் தமிழ் தான், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு தான். திராவிடத்தை பாதுகாப்போம் என்றால் தமிழகத்தையும், தமிழர்களையும் பாதுகாப்பது என்பது தான் பொருள் என்று அவரே பல கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத காலகட்டத்தில் தென்னிந்திய மொழிகளை அடையாளம் கண்டு, திராவிட நிலம் என்று நமது முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு திராவிடம் தான் என்று பண்டிதர் அயோத்திதாசர் முன்மொழிந்த கோட்பாடு. திராவிட கட்சிகளுக்கு முன்னால், திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இதை நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
எல்.முருகன் அருந்ததியர் என்பதே, ஆர்.எஸ்.எஸ்., சொல்லித்தான் தெரியும். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் எனக் காட்டிக் கொண்டதில்லை. அருந்ததியர் இயக்கங்களில் ஈடுபாடு காட்டியதில்லை. அருந்ததியர்களின் உரிமைக்காக அவர் போராடியதும் இல்லை. படிக்கும் காலத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., இணைந்து செயல்பட்டு வந்தார்.
அருந்ததியரின் இடஒதுக்கீடு மற்றும் போராட்டங்களில் பங்கேற்றதில்லை. தமிழகத்தில் அருந்ததியருக்கும், எல்.முருகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியது முதல் அருந்ததியர்களின் நலனுக்காகவே போராடி வருகிறது. வி.சி.க., மீது பொறாமை கொண்டவர்கள் திட்டமிட்டே, வதந்திகளை பரப்புகின்றனர். வி.சி.க., சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு, அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. மீண்டும் மீண்டும், வதந்தி பரப்புகின்றனர். இது அநாகரிமான அரசியல்.
உள்ஒதுக்கீட்டை எதிர்த்து பேசும் எந்த அமைப்பையும் இவர்கள் கண்டிப்பதில்லை. இடஒதுக்கீட்டை ஆதரித்த ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான். ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் வழிகாட்டுதலின்படி, வி.சி.க., மீது திட்டமிட்டே அவதூறு பரப்புகின்றனர், எனக் குற்றம்சாட்டினார்.