இலங்கையில் மூவர் மரணம் - விசாரணையில் வெளியான தகவல்
21 ஐப்பசி 2024 திங்கள் 13:21 | பார்வைகள் : 1723
சிலாபம் பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சிலாபம், சிங்கபுரவில் உள்ள வர்த்தக இல்லத்தில் இடம்பெற்றது கொலை மற்றும் தற்கொலை எனத் தெரியவந்துள்ளது.
இதன்படி, சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இளங்கரத்ன பண்டாவின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு பெண்களும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, தீயில் தூக்கி வீசப்பட்டுள்ளனர் என்றும், தந்தை தீயில் குதித்து கருகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்ததில் 15 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 51 வயதுடைய வர்த்தகர் சேனாரத்ன (தந்தை) 44 வயதான மஞ்சுளா நிரோஷனி பண்டார (தாய்) மற்றும் 15 வயதான ஏ. நேத்மி நிமேஷா (மகள்) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நெத் நிமேஷாவின் மகள் சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையின் மாணவியாவார். இந்த சம்பவம் சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்றிருக்கலாம் என சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், ஞாயிற்றுக்கிழமை (20) காலை வரையிலும் வீடு எரிந்துகொண்டிருந்துள்ளது.