ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து!
21 ஐப்பசி 2024 திங்கள் 14:21 | பார்வைகள் : 671
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சுசி பேட்ஸ்(32), அமெலியா கெர்(43) மற்றும் ப்ரூக் ஹாலிடே(38) என சீரான ஓட்டங்களை குவித்து அசத்தினர்.
இதையடுத்து கோப்பை கனவுடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் மற்றும் கேப்டனான லாரா வால்வார்ட் 27 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார்.
ஆனால் பின்னர் வந்த வீராங்கனைகள் ஜொலிக்க தவறியதை அடுத்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அமெலியா கெர் மற்றும் ரோஸ்மேரி மெய்ர் தலா 3 விக்கெட்டுகளை பறித்து அசத்தினர்.
இதன் மூலம் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் முதல் முறையாக ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.