Paristamil Navigation Paristamil advert login

மாஜி மந்திரி வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

மாஜி மந்திரி வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு

24 ஐப்பசி 2024 வியாழன் 01:14 | பார்வைகள் : 503


கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஜெயலலிதா ஆட்சியில் தொழில், வனம், நகர்ப்புற வளர்ச்சி போன்ற துறைகளின் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.

தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது சென்னை பெருங்களத்துாரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சி.எம்.டி.ஏ., எனப்படும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் அனுமதி கேட்ட நிறுவனத்திடம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என லஞ்ச ஒழிப்பு துறையில், அறப்போர் இயக்கம் புகார் கொடுத்தது.

போலீசார் விசாரித்து, வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம், கட்டுமான நிறுவனம் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த செப்டம்பரில் வைத்திலிங்கம் மற்றும் உறவினர் வீடுகளில் நடத்திய சோதனையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானதால், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் இணை நிறுவனத்திற்கு 28 கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பது தெரிய வந்தது. இணை நிறுவனத்தின் இயக்குனர்கள் வைத்திலிங்கத்தின் மகன்கள் மற்றும் உறவினர் என கண்டறிந்தனர்.

பணம் கைமாற்ற உருவாக்கப்பட்டதே இணைநிறுவனம் என்பதும், வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை என்பதும் ஊர்ஜிதமானது. வாங்கிய பணத்தில், அமைச்சரின் மகன்கள் திருச்சி மாவட்டத்தில் வாங்கிய நிலங்கள், மனைகள் அடையாளம் காணப்பட்டன.

அதையடுத்து, சென்னை அசோக் நகரில் ஒரே கட்டடத்தில் செயல்படும் வைத்திலிங்கம் குடும்பத்தினரின் 6 நிறுவனங்களில், நேற்று அமலாக்க அதிகாரிகள் சோதனை செய்தனர். தி.நகரில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் குழும நிதி அதிகாரி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன் குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டிலும் சோதனை செய்தனர். அப்போது வைத்திலிங்கம் அங்குதான் இருந்தார். ஒரத்தநாடு அருகே, பேய்க்கரம்பன் கோட்டையில் உள்ள வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வத்தின் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, சோதனையில் ஈடுபட்டனர்.


சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில்...

சென்னை எழும்பூரில் உள்ள, சி.எம்.டி.ஏ., அலுவலகத்திலும் சோதனை நடந்தது. வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது பணியில் இருந்த அதிகாரிகள் யார்; கோப்புகளில் கையெழுத்திட்டவர்கள் யார் என்ற விபரங்களை சேகரித்தனர். சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ., விடுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் அறையிலும் சோதனை செய்தனர்.

தஞ்சாவூரில் உள்ள பிரபு வீட்டிற்கு நான்கு அதிகாரிகள் வந்தனர். பிரபுவின் மனைவி, மகன், மாமியார் ஆகிய மூவரை அதிகாரிகள் அழைத்து செல்ல முயன்றபோது, பிரபுவின் ஆதரவாளர்கள், 'பெண்களை எங்கே அழைத்து செல்கிறீர்கள்?' என கேட்டு வாக்குவாதம் செய்தனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பிரபு மனைவி மற்றும் உறவினர்களை, பேய்கரம்பன்கோட்டையில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆதரவாளர்கள் இரு கார்களில் தொடர்ந்து சென்றனர்.

கோவையிலும் வைத்திலிங்கத்தின் உறவினர் வீடுகளில் சோதனை நடந்தது. நிறைய தகவல்கள் சேகரிக்க முடிந்தது என அதிகாரிகள் கூறினர். சோதனைகளின் விபரங்களை வெளியிடவில்லை.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்