முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதியலாம்: மும்பை உயர் நீதிமன்றம்
24 ஐப்பசி 2024 வியாழன் 01:16 | பார்வைகள் : 692
ஒரே நேரத்தில் நான்கு மனைவியருடன் வாழ முஸ்லிம் தனிநபர் சட்டம் உரிமை தருவதால், முஸ்லிம் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம்' என, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மஹாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞருக்கு ஏற்கனவே இரண்டு மனைவியர் உள்ளனர். இந்நிலையில், அவர் மூன்றாவதாக அல்ஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை மணந்தார். தங்களின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்யக்கோரி, தானே மாநகராட்சி அலுவலகத்தை நாடினார்.
மஹாராஷ்டிரா திருமண பதிவு சட்டத்தின் கீழ், மாநகராட்சி அதிகாரிகள் முஸ்லிம் இளைஞரின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அந்த நபர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோலபவல்லா மற்றும் சோமசேகர் சுதர்சன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
முஸ்லிம் தனிநபர் சட்டம் ஒரே சமயத்தில் நான்கு பெண்களை மணக்க அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய மறுப்பது முற்றிலும் தவறானது.
இரண்டு வாரத்திற்குள் தேவையான ஆவணங்களை திருமண ஜோடிகள் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, 10 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.