யூடியூபர் தொப்புள் கொடி வெட்டிய விவகாரம்! நடவடிக்கை
24 ஐப்பசி 2024 வியாழன் 01:21 | பார்வைகள் : 1031
பிரசவத்தின் போது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட இர்பானை அனுமதித்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
உணவு ரிவ்யூ செய்யும் யூடியூபரான இர்பான் தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, குழந்தை பிறக்கும் போதும் கூட, அவர் செய்த சேட்டையை வீடியோவாக எடுத்து வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவேன் என டாக்டர்களிடம் அடம் பிடித்துள்ளார். இது மருத்துவ சட்ட விதிகளுக்கு எதிரானது என தெரிந்தும், மருத்துவமனையின் பிரபலத்திற்காக, டாக்டர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தொப்புள் கொடியை வெட்டுவதை வீடியோ எடுத்த இர்பான், தன் சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையான நிலையில், இர்பானை மன்னிக்க முடியாது என்றும், அவர் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரசவத்தின் போது, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்ட இர்பானை அனுமதித்த ரெயின்போ மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
உள்நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், தடை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்கு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியை வெட்டிய இர்பான் மீதான நடவடிக்கை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.