இலங்கை வந்த மற்றொரு இந்திய விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்!
24 ஐப்பசி 2024 வியாழன் 12:28 | பார்வைகள் : 948
இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்டுநாயக்கவுக்கு வரவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தரையிறங்கும் முன் தொலைபேசி ஊடாக தகவல் வந்ததாக சிறிலங்கன் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட 108 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த விமானம் 2.55 மணியளவில் தரையிறக்கப்பட்டதாகவும், பின்னர் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதியும் இதே விஸ்டாரா விமான சேவைக்கு சொந்தமான விமான ஒன்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இன்றைய தினம் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா, விஸ்டாரா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களுக்கு இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 11 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 250 விமானங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக விமானங்களை அவசரமாக தரையிறக்கி சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதனால் விமான பயணங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.