கெஜ்ரிவால் மீது தாக்குதல்: ஆம்ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
26 ஐப்பசி 2024 சனி 03:08 | பார்வைகள் : 867
டில்லியில் பாத யாத்திரை சென்றபோது கெஜ்ரிவால் பா. ஜ., வினரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
டில்லி, விகாஸ்புரியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை சென்றபோது திடீரென புகுந்த கும்பல் ஒன்று அவரை தாக்கியதாக டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ., கொல்ல முயற்சி செய்கிறது. பா.ஜ., வின் கேடுகெட்ட அரசியல் எவ்வளவு கீழ்நிலைக்கு சென்று விட்டது என்பதை டில்லி மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியா, 'அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது கவலை அளிக்கிறது. பா.ஜ., தனது குண்டர்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் நேர்ந்தால், பா. ஜ., தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும். நாங்கள் பயப்படப் போவதில்லை. ஆம் ஆத்மி கட்சி தனது பணியில் உறுதியாக இருக்கும்,'என்றார்.
போலீசார் மறுப்பு
ஆம் ஆத்மியினரின் குற்றச்சாட்டை டில்லி போலீசார் மறுத்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது எங்கும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா விளக்கம் அளித்துள்ளார்.