Paristamil Navigation Paristamil advert login

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

500 தனியார் மின்சார பஸ்கள் இயக்க 100 வழித்தடம் தேடுகிறது எம்.டி.சி.,

26 ஐப்பசி 2024 சனி 03:10 | பார்வைகள் : 434


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேட்டரி பேருந்துகளை இயக்க 'டெண்டர்' வெளியிட்டு, முதற்கட்டமாக 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த பேருந்துகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

இந்நிலையில், மின்சார பேருந்துகளை எந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகர பேருந்துகள் 3,454; இதன் தேவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7,000 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதை, மாநகர போக்குவரத்து கழகத்தால் மட்டுமே முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. எனவே, கட்டண உயர்வு இன்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு, 1,000 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம்.

முதற்கட்டமாக, 100 'ஏசி' பேருந்துகள் உட்பட, 500 மின்சார பேருந்துகளை இயக்க, அசோக் லைலாண்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஓ.எச்.எம்.குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, பேருந்துகளை 12 ஆண்டுகள் பராமரித்து இயக்குவது, உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது, ஓட்டுனரை பணியமர்த்துவது உள்ளிட்டவை ஒப்பந்ததாரரின் பணி.


மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்துனர் நியமிக்கப்பட்டு, வழக்கமான கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம்.

ஒப்பந்ததாரருக்கு கி.மீ., ஒன்றுக்கு 'ஏசி' வசதி இல்லாத மின்சார பேருந்துகளுக்கு, 77.16 ரூபாய், 'ஏசி' பேருந்துகளுக்கு 80.86 ரூபாய், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக, 180 கி.மீ., வரை இயக்க முடியும்.

பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து, சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும்.

தனியார் இயக்கும் 500 மின்சார பேருந்துகளில் 50 சதவீதம், ஏற்கனவே செல்லும் வழித்தடங்களில் கூடுதலாக இயக்கப்படும்.

மீதமுள்ள 50 சதவீத பேருந்துகளை புது வழித்தடங்களில் இயக்க உள்ளோம். இதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்த பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்