ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சரானது ஏன்? செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
2 மார்கழி 2024 திங்கள் 08:32 | பார்வைகள் : 917
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றிருப்பது, சாட்சியங்களுக்கு அழுத்தத்தை உருவாக்காதா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி, அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகக் கூறப்படும் ஒய்.பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு ஓராண்டை கடந்த பிறகும், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்தில் தனி நீதிபதியை நியமிக்க வேண்டும், என வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை நீர்த்து போகச் செய்யும் விதமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வழக்கில் புதிதாக தமிழக அரசும், போலீசாரும் சேர்த்துள்ளதாகவும், அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், மனுதாரர் ஒய். பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யுமாறு சுப்ரிம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால், விசாரணை பாதிக்கும் என்று மனுதாரர்கள் தரப்பு வாதிட்டனர்.
அப்போது, அரசியல் உள்நோக்கம், காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தனக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்யப்படுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஜாமின் பெற்ற மறுநாளே அமைச்சராகி உள்ளீர்கள். இதன்மூலம், இந்த வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் உண்டாகாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறையினர் கோர்ட்டை நாடுவார்கள்,' எனக் கூறினர். தொடர்ந்து, வழக்கின் விசாரணையை டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.