திருவண்ணாமலை மண் சரிவு: 7 பேரின் உடல்களும் மீட்பு
2 மார்கழி 2024 திங்கள் 15:03 | பார்வைகள் : 900
திருவண்ணாமலையில் மண்ணில் புதையுண்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருப்பதை கண்டு, மீட்புக்குழுவினரே கண்ணீர் விட்டனர்.
பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் சிக்கிக் கொண்டனர்.
சம்பவம் நடந்த நேற்று அங்கு மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்பு பணிகளில் தொய்வும், தாமதமும் ஏற்பட்டது. அவ்வப்போது மழை குறுக்கிட்டபோதிலும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. மாலை 5 மணிக்கு மேல் ஒருவர் சடலம் தென்பட்டது.
அடுத்தடுத்து ஒவ்வொரு சடலமாக மீட்கப்பட்டது. இரவு 8 மணி நிலவரப்படி 5 சடலங்களும், சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டன. மண் மூடிய நிலையில் சடலங்கள் அனைத்தும் கிடந்தன. இதனால் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக்குழுவினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலங்களை கண்டு மீட்புக்குழுவினரும், போலீசாரும் கண்கலங்கினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.