யார் சொல்வதை கேட்பீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
4 மார்கழி 2024 புதன் 01:35 | பார்வைகள் : 549
யார் சொல்வதை கேட்பீர்கள். யார் கருத்தை மதிப்பீர்கள்,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: சென்னையில் மட்டும் கவனம் செலுத்தினர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மண் சரிவில் சிக்கி 7 பேர் இறந்தது பெரிய துயரம். பல மணிநேம் கழித்து பார்த்தது அதைவிட துயரம். விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என நினைக்கவில்லை. பேரிடர் இன்னும் அதிகமாக வரும். புவி வெப்பமயமாதல் பற்றி தெரியவில்லை. ஏன் வெப்பமாகிறது என தெரியவில்லை. பருவநிலை மாறுகிறது. அதுவாக மாறுகிறதோ. நாம் மாற்றினோமா என யாரும் சிந்திக்க யாரும் தயாராக இல்லை
புவி வெப்பமயமாதலால், பருவமழை என்ற ஒன்று இருக்காது. பெருமழை, புயல் மழை தான் வரும். இரண்டையையும் சமாளிக்க முடியாது. பருவமழை இல்லை என்ற நிலை வந்ததால் பேரிடர் பெருகிக் கொண்டே போகும். அதை நோக்கிய நகர்வுகள் நம்மிடம் இல்லை. புவி வெப்பம், பருவநிலை மாற்றம் இல்லை என டிரம்ப் சொல்கிறார். அவரிடம் என்ன பேச முடியும்? பெருமழையும், புயலும் வந்தால் அழிவை தான் சந்திக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் யாரை மதிக்கிறார்? அதானி எதற்காக வந்தார் எனக்கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர் தமிழகத்திற்கு வந்தார். யாரை பார்க்க வந்தார்? எதற்காக வந்தார்? யாரை, எங்கு சந்தித்தார்? இதை ராமதாஸ் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டீர்கள். என்னை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டீர்கள். அதனால் நான் கேட்டால் சொல்ல மாட்டீர்கள். ராமதாஸ் பெரிய தலைவர். அவருக்கு வேறு வேலை இல்லை என்கிறீர்கள். பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்கிறீர்கள். 73 இடம் வென்ற தலைவர் (பழனிசாமி) ஆள் இல்லை என்றால், யார் சொல்வதை கேட்பீர்கள்? யார் கருத்தை மதிப்பீர்கள்?
ஜார்க்கண்ட் முதல்வர், மஹா., முதல்வர் மற்றும் கெஜ்ரிவால் மீது ரெய்டு வரும் போது, தமிழகத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரெய்டு வராதது ஏன்?
அவதூறு பேசுகிறவர்கள் மீது அனைவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? அவர்கள் மீது வழக்கு கொடுத்தால் அரசு பதிவு செய்கிறதா? ஆளுங்கட்சி சார்பில் வாடகை வாய் மூலம் பேசுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் இப்படித் தான் பேசினார்களா? காங்கிரசை அதிகம் எதிர்த்துள்ளேன். அவர்கள் வாடகைக்கு ஆள் எடுத்து திட்டவிடுகின்றனரா? சங்கி என்றால் நண்பன் என அர்த்தம். திராவிடம் என்றால், எப்படி பொருள் பார்த்தாலும் திருட்டுப் பயல் என்று தான் அர்த்தம் வருகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.