கள்ளக்குறிச்சி வழக்கில் சி.பி.ஐ.,விசாரணையை தடுக்க வேண்டாம்
6 மார்கழி 2024 வெள்ளி 03:05 | பார்வைகள் : 570
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான சி.பி.ஐ., விசாரணையை தடுக்க வேண்டாம் என்று, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன; சி.பி.ஐ., விசாரணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து, 69 பேர் இறந்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி கடந்த 20ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கண்டனம்
அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 'சி.பி.ஐ., வசம் வழக்கை ஒப்படைத்தால், விசாரணை முடிய காலதாமதமாகும். எனவே, தமிழக காவல்துறை விசாரணையை, தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என, அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ., விசாரணையை தடுக்க வேண்டாம் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன் விபரம்:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கள்ளச்சாராய வழக்கில், விசாரணையை காலம் தாழ்த்தி முடக்க நினைத்தே, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கை சி.பி.ஐ., விசாரிப்பதில், தி.மு.க., அரசுக்கு என்ன பயம்? சாராய மரணங்களுக்கு, முதல்வரின் நிர்வாக திறனற்ற அரசின் அலட்சியப் போக்கே காரணம்.
எனவே, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை, இதை விசாரிப்பது ஏற்புடையதாக இருக்காது. மரணம் அடைந்த, 67 பேருக்கான நீதியை நிலைநாட்ட, அ.தி.மு.க., தொடர்ந்து போராடும்.
பா.ம.க., தலைவர் அன்பு மணி: சாராயம் குடித்து, 67 பேர் இறந்த விவகாரத்தில், தி.மு.க., அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால், வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பதில், எந்த தயக்கமும் தேவையில்லை.
ஆனால், அவசரமாக மேல்முறையீடு செய்திருப்பதன் வாயிலாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியது, அதற்கு மறைமுகமாக ஆதரவளித்தது உள்ளிட்ட உண்மைகள் வெளிவந்து விடுமோ என்று தி.மு.க., அரசு அஞ்சுவது தெரிகிறது.
இதற்கு பதில் அளித்து, சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது; குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.
'ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அதுவும் விசாரணை நடத்தி வருகிறது' என்று கூறியுள்ளார்.
'கள்ளச்சாராயம் விற்போருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க, தமிழக அரசால் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. குற்றத்தில் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
'குண்டர் சட்டத்தில், 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், சி.பி.ஐ., விசாரணை என்பது, வழக்கின் வேகத்தை தாமதப்படுத்தும்.
'பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பது தாமதமாகும். எனவே தான், தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது' என்று ரகுபதி தெரிவித்து உள்ளார்.
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சி.பி.ஐ., விசாரணை வேண்டாம் என, உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய பழனிசாமி, இதில் மட்டும் சி.பி.ஐ., விசாரணை கோருவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்றும் ரகுபதி கூறியுள்ளார்.
காவல் நீட்டிப்பு
இதற்கிடையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், ஷாகுல் அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உட்பட, 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது.
கடலுார் மத்திய சிறையில் உள்ள, 23 பேரையும் காணொளி காட்சி வாயிலாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து, 23 பேரின் நீதிமன்ற காவலை வரும் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.