கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்: விஜய் எச்சரிக்கை
6 மார்கழி 2024 வெள்ளி 17:46 | பார்வைகள் : 300
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, கூட்டணி கணக்கு அனைத்தையும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் '', என த.வெ.க., தலைவர் விஜய் கூறினார்.
சென்னையில் இன்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ' என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தகத்தை த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும், இரண்டாவது பிரதியை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவும் பெற்றுக் கொண்டனர்.
தேர்தல் கமிஷனர்கள் நியமனம்
விழாவில் விஜய் பேசியதாவது: இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்து இருந்தால் என்ன நினைப்பார்? இன்றைக்கு இருக்கும் இந்தியாவை பார்த்து பெருமைப்படுவாரா? கவலைப்படுவாரா? அப்படியே வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார்? நாடு முழு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம் காக்க அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பு கடமை, நம்மிடம் இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்க வேண்டும். ஒரு மித்த கருத்து அடிப்படையில் தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை இல்லை
இன்று மணிப்பூரில் நடப்பது அனைவருக்கும் தெரியும். அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், நம்மை மேல் உள்ள ஒரு அரசு ஆட்சி செய்து கொண்டு உள்ளது. தமிழக அரசு எப்படி உள்ளது. தமிழகத்தில் வேங்கைவயலில் நடந்தது அனைவருக்கும் தெரியும். சமூக நீதி பேசும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்தது போன்று எனக்கு தெரியவில்லை.இவ்வளவு ஆண்டுகள் தாண்டி ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதையெல்லாம் பார்த்தால் அம்பேத்கர், வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.
உணர்வுப்பூர்வமாக
தினமும் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக டுவீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக மக்களோடு மக்களாக நிற்பதாக காட்டிக்கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழைத்தண்ணீரில் நிற்பது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனால், சம்பிரதாயத்திற்காக நாமும் அதை செய்ய வேண்டியதாகி விடுகிறது. மக்கள் உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும்.
எச்சரிக்கை
தமிழக மக்களுக்கு எங்கு என்ன பிரச்னை நடந்தாலும் அவர்களுக்காக உரிமைகளுக்காக உணர்வுப்பூர்வமாக இருப்பேன். எப்போதும் அப்படியே இருப்பேன். மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்ற எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காக பல வழிகளில் காத்து வரும் கூட்டணி கணக்கு அனைத்தையும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.
அழுத்தம்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனால் இன்று வர இயலவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் மூலம் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என யூகிக்க முடிகிறது. அவரின் மனது முழுவதும் நம்முடன் தான் இருக்கும்.இவ்வாறு விஜய் பேசினார்.
விழாவில், விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், வி.சி.க., துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினர்.