ஆதவ் அர்ஜூனா பேச்சால் தி.மு.க., கூட்டணியில் சிக்கல்!
6 மார்கழி 2024 வெள்ளி 17:54 | பார்வைகள் : 569
தமிழகத்தில் மன்னராட்சி நிலவுகிறது. 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பேசப்பட்ட, உற்று நோக்கப்பட்ட நிகழ்வு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (டிச.6) அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விகடன் நிறுவனம் சார்பில் நடந்த விழாவில், விகடன் நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, தவெக தலைவர் நடிகர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;
திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டாலும், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. பட்டியலினத்தவர் ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்னும்போது, அதற்கு முதல் குரலாக நடிகர் விஜயின் குரல் ஒலித்தது. அவர் 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலைவிட்டு இங்கே வந்திருக்கிறார்.
இங்கே சிலர், சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செய்கின்றனர். ஒரு நிறுவனம் எப்படி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது? தமிழகத்தில் நிலவும் ஊழலையும், மதவாதத்தையும் பற்றி விஜய் பேச வேண்டும்.
வேங்கை வயல் பிரச்னை இன்னமும் தீர்க்கப்படவில்லை. ஒரு கான்ஸ்டபிள் நினைத்தால் கூட குற்றவாளியை பிடித்துவிடலாம். ஆனால் சாதி தான் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. நடிகர் விஜய் வேங்கைவயல் செல்லவேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்கி அதில் பட்டியலின மக்களை பங்கேற்க வைக்கவேண்டும். இங்கு மன்னராட்சி நிலவுகிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கேட்டால் சங்கி என்கிறார்கள். 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் புதிய அரசியலை மக்கள் உருவாக்க முடிவெடுத்துள்ளனர். பிறப்பால் ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது.
இவ்வாறு ஆதவ் அர்ஜூனா பேசினார்.
நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா மேடையில் பேசிக் கொண்டு இருக்கும் அதே தருணத்தில் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு துணை பொதுச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் ஆதவ் அர்ஜூனாவுக்கு நேர் எதிராக பேசி உள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது;
எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை ஏன் தவிர்த்தார் என்று விளக்கம் கொடுத்துவிட்டார். பொதுவான ஒரு நிகழ்ச்சியாக, அம்பேத்கரை கொண்டாடுகிற சிறப்பு நிகழ்ச்சியாக இருந்தால் அது எந்த மேடையாக இருந்தாலும் நாங்கள் ஏறுவோம்.
இது ஒரு நூல் வெளியீட்டு விழா அல்ல. அதில் ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டதால் தான் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. இன்று ஆதவ் அர்ஜூனா பேசும் மன்னராட்சியை தமிழகத்தில் ஆட்சியில் உட்கார வைக்க 5 ஆண்டுகள் வேலை பார்த்தவர் அவர்தான். இப்போது (ஆதவ் அர்ஜூனா) எங்கள் கட்சியில் இருக்கிறார்.
இப்போது நடிகர் விஜய்க்காக ஆதர் அர்ஜூனா வேலை பார்க்கிறார். அவரது பொறுப்பு என்ன, என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி திருமாவளவன் இனி முடிவு எடுப்பார். எங்கள் கட்சி நிலைப்பாடு என்ன என்பதை பற்றி அவர் மீண்டும், மீண்டும் தெளிவுப்படுத்தி விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.ஆதவ் அர்ஜூனா பேச்சால் வி.சி.க., கட்சிக்குள்ளும், தி.மு.க., கூட்டணியிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா மீது திருமா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க., தரப்பில் அழுத்தம் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.