விஜய் பேச்சில் உடன்பாடில்லை! ஆதவ் இடம் விளக்கம் கேட்போம்! திருமாவளவன் பேட்டி
7 மார்கழி 2024 சனி 05:06 | பார்வைகள் : 654
அம்பேத்கர் புத்தக விழாவில் நான் பங்கேற்காததற்கு தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காரணம் என்று நடிகர் விஜய் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்கு உரியது. அம்பேத்கர் பற்றி விஜய் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் இருப்பது தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தந்த அழுத்தம் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார். அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்று நான் தெளிவுப்படுத்தி இருக்கிறேன்.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானோ என் கட்சியோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் இருப்பதற்கு நடிகர் விஜய் காரணமில்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த வித சிக்கலும் இல்லை.
ஆனால், எங்கள் இருவரையும் வைத்து, விஜய் திருமாவளவன் இருவரும் மேடை ஏற போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக நிகழ்வு உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே அதற்கு அரசியல் சாயம் பூசியவர்கள் யார், அதற்கு என்ன பின்னணி என்பதை அறிய வேண்டிய தேவை உள்ளது.
அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள், செய்தியை வெளியிடுகிறார்கள் என்பது முக்கியமானது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக தேர்தல் அரசியல் களத்தில் இருக்கிறோம். ஓரளவுக்கு எங்களால் யூகிக்க முடியும். யார் என்ன பின்னணியில் பேசுகிறார்கள் என்று கணிக்க முடியும்.
அப்படித்தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கிவிடுவார்கள் என்ற அடிப்படையில் தான் நானே முன்கூட்டியே சொல்லிவிட்டேன். தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறி வைத்து காய்கள் நகர்த்துகிற அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் நான் ஒரு வாய்ப்பை தர விரும்பவில்லை.
எனவே வெற்றிகரமாக விழாவை நடத்துங்கள் என்று வாழ்த்து கூறி விட்டேன். நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நல்ல எண்ணத்தில் எடுத்த முடிவு. விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் கூட்டணி சிதைந்து விடக்கூடாது என்று தொலைநோக்குடன் நான் எடுத்த முடிவு. எனக்கு எந்த வகையான அழுத்தமும் இல்லை. தி.மு.க., அதில் தலையிடவில்லை.
மன்னராட்சி பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. ஆதவ் அர்ஜூனாவின் கருத்து அவரது கருத்து. எனது மனசாட்சி அங்கு உள்ளதாக ஒரு நம்பிக்கையில் அவர் பேசி இருக்கிறார்.
நாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம். அந்த கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு பங்கு உண்டு. அந்த வகையில் அந்த கூட்டணியில் நாங்கள் தொடர்கிறோம், தொடர்வோம். இதை பலமுறை சொல்லி இருக்கிறோம், இப்போதும் சொல்கிறோம்.
தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அவர்(ஆதவ் அர்ஜூனா) கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம்.இவ்வாறு அவர் கூறினார்.