உருவானது புதிய காற்றழுத்தம்: 10ல் துவங்குகிறது கனமழை
8 மார்கழி 2024 ஞாயிறு 03:50 | பார்வைகள் : 479
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இதன் நகர்வு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், நாளை மறுதினம் முதல் கனமழை பெய்யத் துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் தாக்கம் காரணமாக, இப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இது, இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு, மேலும் மேற்கு, வடமேற்கில் தமிழகம், இலங்கை கரையை நோக்கி 11ல் நெருங்கும்.
அதே சமயத்தில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த பின்னணியில், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம்
தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை மறுதினம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில், 11ல் கனமழை பெய்யலாம்.
சென்னையில்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வலுவடைந்து வரும் நிலையில், 11 வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதி களுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.