200 அல்ல 234 இலக்கை மாற்றியது தி.மு.க.,
8 மார்கழி 2024 ஞாயிறு 03:54 | பார்வைகள் : 577
நடிகர் விஜய் பேச்சு, தி.மு.க.,வையும், அதன் அமைச்சர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. '200 அல்லது 234 தொகுதிகளில் வெற்றி' என, 2026 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் இலக்கையும் மாற்ற வைத்திருக்கிறது.
வரும், 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்; அதற்கேற்ப இலக்கு நிர்ணயித்து, கட்சியினர் களத்தில் வேலை பார்க்க வேண்டும்' என சமீபத்தில் நடந்த கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து, அமைச்சர்களும் செல்லும் இடமெல்லாம், '200 தொகுதிகளை இலக்காக வைத்து, தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' என்று, கட்சியினர் மத்தியில் பேசத் துவங்கினர். கட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த முழக்கம் ஒலித்தது.
எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையின்மை தொடரும் நிலையில், தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை அடுத்த தேர்தலில் பெறக்கூடும் என, பலரும் பேசத் துவங்கினர்.
இந்த நிலையில் தான், அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 'இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என, எகத்தாள முழக்கமிடுகின்றனர். சுய நலத்திற்காக, தி.மு.க., அமைத்துள்ள கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்' என்றார்.
இது, தி.மு.க.,வை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கோபமாகி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் போனில் பேசியிருக்கிறார்; சிலரை வீட்டுக்கு அழைத்தும் பேசியிருக்கிறார். அதன் வெளிப்பாடு தான், தி.மு.க., முழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். '200 அல்ல, 234 தொகுதிகளில் வெற்றி' என, அமைச்சர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
களத்திற்கே வராதவர்கள் எல்லாம் கண்டதை பேசுகின்றனர். 200 அல்லது 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். அதற்கான முழு வேகத்தோடு இனி செயல்படுவோம், என்றார், அமைச்சர் சேகர்பாபு.
துாத்துக்குடியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனும், புதுக்கோட்டையில் பேட்டி அளித்த ரகுபதியும், திருச்சியில் பேட்டி அளித்த அமைச்சர் மதிவேந்தனும், 200க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கூட்டணி கட்சியினர் அதிருப்திக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருப்பார்.
ஆனாலும், அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமான பின், அதிருப்தியை தவிர்க்க முடியவில்லை. தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தந்த பிரஷாந்த் கிஷோருக்கு உதவியாக செயல்பட்டவர் ஆதவ் அர்ஜுனா. தி.மு.க., தலைமையுடன் முரண்பட்டு வெளியேறினார். பணபலமிக்கவர் என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உடனடியாக இடமும், துணை பொதுச்செயலர் பதவியும் கிடைத்தது.
லோக்சபா தேர்தலில் 'சீட்' தர மறுத்து முட்டுக்கட்டை போட்டதால், தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படவும், விஜயுடன் கைகோர்க்கவும் வைத்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில், புத்தகம் பற்றி பேசுவது தான் மரபு.
அதை மீறி அரசியல் பேசினார் விஜய். எங்கள் தேர்தல் இலக்கை விமர்சித்து வம்பு இழுத்திருக்கிறார். அதனால், பதிலடி கொடுக்க கட்டளையிட்டது மேலிடம். இனி கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் இதையே எதிரொலிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.