திருமாவளவன் இரட்டை வேடம் ஆடுவதாக தி.மு.க.,வினர் கொந்தளிப்பு!
9 மார்கழி 2024 திங்கள் 03:57 | பார்வைகள் : 483
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவை, தி.மு.க.,வுக்கு எதிராக துாண்டிவிட்டு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், 'டபுள் கேம்' ஆடுவதாக தி.மு.க., நிர்வாகிகளும், மாவட்டச் செயலர்களும் கொந்தளிக்கின்றனர். அதனால், ஆதவ் அர்ஜுனாவை, வி.சி., கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., மேலிடம் தரப்பில் திருமாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின், 'வாய்ஸ் ஆப் காமன்' அமைப்பு சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 'தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்' என்றார்.
அதேபோல, நுாலை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பேசுகையில், '200 தொகுதிகளில் வெல்வோம் என்று இறுமாப்புடன் எகத்தாளமாக முழக்கமிடுகின்றனர். சுயநலத்துக்காக தி.மு.க., அமைத்துள்ள கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில், மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்' என்றார்.
பூசி மெழுகினார்
தி.மு.க.,வை நேரடியாக தாக்கி இருவரும் பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. நுால் வெளியீட்டு விழாவில் விஜய் உள்ளிட்டோர் விவகாரமாக பேசுவர் என்பது தெரிந்து தான், வி.சி., தலைவர் திருமாவளவன் அந்த விழாவுக்கு போகக்கூடாது என, தி.மு.க., தரப்பில் நெருக்கடி தரப்பட்டது.
அந்த நெருக்கடிக்கு பணிந்த திருமாவும், 'தி.மு.க., கூட்டணியை உடைக்க சதி நடப்பதால், நுால் வெளியீட்டு விழாவுக்கு செல்லவில்லை' என்று கூறி விழாவை புறக்கணித்து விட்டார்.
அதேநேரத்தில், விழாவில் தி.மு.க.,வுக்கு எதிராக பேசிய ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதை, திருமா கண்டு கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, 'ஆதவ் பேச்சுக்கும், வி.சி., கட்சிக்கும் சம்பந்தமில்லை' என்றும் பூசி மெழுகினார்.
ஒரு பக்கம் ஆதவுக்கு ஆதரவு, இன்னொரு பக்கம் தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் பேச்சு என, திருமா 'டபுள் கேம்' ஆடுவதாக தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். எனவே, 'தி.மு.க., கூட்டணியிலிருந்து, வி.சி.,யை கழற்றி விட வேண்டும்' என, கட்சி தலைமைக்கு நிர்வாகிகளும், மா.செ.,க்களும் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தல் வரை, தி.மு.க.,வின் வியூக வகுப்பு குழுவில் இருந்த ஆதவை, ஆட்சிக்கு வந்ததும் கட்சி தலைமை ஒதுக்கியது. அதனால், தன்னுடன் நட்பாக இருந்த திருமாவோடு கைகோர்த்த ஆதவ், வி.சி., கட்சியில் இணைந்து துணை பொதுச்செயலரானார். அன்றிலிருந்தே, தி.மு.க.,வுக்கு எதிராக ஆதவ் செயல்பட்டு வருகிறார்.
ஆட்சியில் பங்கு
ஆதவ் யோசனைப்படியே, கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை திருமா நடத்தினார். அடுத்த கட்டமாக, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தையும் ஆதவ் எழுப்பினார்.
இதன் தொடர்ச்சியாகவே, 'கூட்டணி கட்சி களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுப்போம்' என, தன் கட்சியின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்தார். இதுபற்றி கேள்வி எழுப்பிய போது, 'ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை, கட்சி துவங்கிய நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம்' என்று கூறி திருமா சமாளித்தார்.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்க்கு முக்கியத்துவம் தரும் வகையில், 'தமிழகத்தில் த.வெ.க., கூட இரண்டாம் இடத்துக்கு வரலாம்' என்றார்.
இதன் வாயிலாக, ஒரு பக்கம் ஆதவ் செயல்பாடுகளை ஆதரிப்பதும், இன்னொரு பக்கம் தி.மு.க.,வை சமாதானப்படுத்துவதுமாக, திருமா 'டபுள் கேம்' ஆடுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எனவே, இனியும் திருமாவை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவரை வெளியேற்ற வேண்டும் என்பதே தி.மு.க.,வில் அனைவரின் விருப்பம்.
இந்த விபரத்தை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடம், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என, பலரும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
அவசரம் கூடாது
ஆனால், முதல்வர் ஸ்டாலின் தான், 'அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது' என்று கூறி எல்லாரையும் சமாளித்து வருகிறார். அத்துடன், ஆதவை வி.சி.,யிலிருந்து நீக்க வேண்டும் என, தி.மு.க., மேலிடம் தரப்பில், திருமாவுக்கு நெருக்கடியும் தரப்படுகிறது. இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
இதற்கிடையில், சொந்த கட்சி மற்றும் தி.மு.க., தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என வி.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.