2030க்குள் இந்திய பொருளாதாரம் இரட்டிப்பாகும்: ஜெய்சங்கர்
9 மார்கழி 2024 திங்கள் 04:02 | பார்வைகள் : 469
பக்ரைனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடந்த மனாமா விவாத மன்றத்தில் பேசுகையில், ''தற்போது 300 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்திய பொருளாதாரம், 2030க்குள் 600 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்,'' என நம்பிக்கை தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கு ஆசிய நாடுகளான கத்தார் மற்றும் பக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
விவாதம்
கத்தார் பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் பக்ரைன் சென்ற அவரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை, முதல் நிகழ்ச்சியாக மனாமாவில் உள்ள ஸ்ரீநாத் ஜி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், '200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாத் ஜி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன், இந்த நாள் துவங்கியது. 'இந்தியா - பக்ரைன் இடையேயான நீண்ட கால நல்லுறவுக்கு இந்த கோவில் ஒரு சிறந்த அடையாளம்' என, குறிப்பிட்டுள்ளார்.
பின், மனாமாவில் நடந்த 20வது மனாமா விவாத மன்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். 'பிராந்திய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் மத்திய கிழக்கின் தலைமை' என்ற தலைப்பில் இந்தாண்டுக்கான விவாதம் நடந்தது.
இதில், அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியா இன்று 300 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரமாக உள்ளது; 2030க்குள் இது இரட்டிப்பாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் வர்த்தகமும் இரட்டிப்பாகும்.
செங்கடல் பகுதியின் பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவமாக திகழ்கிறது. இங்கு நாங்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறோம். இது, ஆசிய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலால் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கப்பலுக்கான கட்டணம், காப்பீடு கட்டணம் உயர்கிறது.
பன்முக உறவு
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஏடன் வளைகுடா, சோமாலியா, வடக்கு அரேபிய கடல் பகுதியில் இந்தியா கடற்படையை நிறுத்தியது. 250 கப்பல்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளோம். 120 கப்பல் ஊழியர்களை மீட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
இன்று நடக்க உள்ள இந்தியா - பக்ரைன் துாதரக கூட்டத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பன்முக உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேச்சு நடத்துவர்.