டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: முதல்வர் மீது தம்பிதுரை குற்றச்சாட்டு!
10 மார்கழி 2024 செவ்வாய் 03:24 | பார்வைகள் : 451
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எந்த காலத்திலும் ஆதரவு அளிக்கவில்லை என்று அ.தி.மு.க.., எம்.பி., தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யும் விவகாரம் முக்கிய விவாத பொருளானது. இந்த உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., 10 மாதங்களாக தி.மு.க., அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கும் நிலை வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.
இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரபரப்பாக வெளியானது. அதில், பார்லிமென்டில் சுரங்க சட்டத் திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க., ஆதரவு அளித்ததாக அக்கட்சியின் எம்.பி., தம்பிதுரை பேசும் வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
பார்லிமென்டில் ஆதரித்துவிட்டு, சட்டசபையில் எதிர்ப்பதாகவும், அ.தி.மு.க., இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதள பதிவில் குற்றம்சாட்டி இருந்தார்.
இந் நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை பதிலளித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் விளக்கம் அளித்த அவர், தான் பேசியதை தவறு என்று ஸ்டாலின் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது; தவறான, ஒரு பொய்யான செய்தியை முதல்வர் ஸ்டாலின் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். நான் எந்த காலக்கட்டத்திலும் நாடாளுமன்றத்தில் அப்படி பேசியது கிடையாது. நான் ஆகஸ்ட் மாதம், கனிமவள சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் போது பேசியது ஆகும். அன்று இருந்த நிலவரம் வேறு.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த தி.மு.க.,வும், காங்கிரஸ் அரசாங்கமும் இந்த சட்டம் வருவதற்கு முன்பு கனிம வளங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்தார்கள். அப்போது ஏலம் என்ற முறை இல்லாமல் தவறான முறையில் தனியாருக்கு அளித்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டது.
அதை தவிர்ப்பதற்காக 2023ல் ஏல முறையில் கனிம வளங்களை தர வேண்டும் என்று பிரதமர் மோடி அரசாங்கத்தால் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை வரவேற்கிறேன் என்றுதான் நான் பொதுவாக சொன்னேன். மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் நிறுவனத்துக்கு சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எக்காலத்திலும் ஆதரவாக பேசியது கிடையாது.
தான் பேசியதை தவறு என்று ஸ்டாலின் சொல்ல வேண்டும். இல்லை என்றால் தி.மு.க., ஐ.டி., விங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நான் பேசியதற்கு ஆதாரமாக எனது பேச்சு உள்ளது.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.