வி.சி.க., - த.வெ.க., இடையே எந்த மோதலும் இல்லை; திருமா!
10 மார்கழி 2024 செவ்வாய் 03:29 | பார்வைகள் : 526
வி.சி.க.,வுக்கும், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த திருமாவளவன், மதியம் சட்டசபை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வி.சி.க., எம்.பி.,க்களின் புயல் நிவாரண நிதியை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசு வழக்கம் போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. வி.சி.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.
தி.மு.க., தரப்பில் இருந்து எந்த நெருக்கடியும், அழுத்தமும் எனக்கு இல்லை. ஆதவ் அர்ஜூனாவை சஸ்பெண்ட் செய்தது குறித்து அவர்கள் யாரும் பேசவில்லை. விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில், நான் பங்கேற்க இயலாது என எடுத்த முடிவு, சுதந்திரமான முடிவு.
நொறுக்கியது!
வி.சி.க.,வுக்கும், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை. விஜயயோடு எங்களுக்கு எந்த சர்ச்சையோடு, சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வி.சி.க., மற்றும் என் மீதான நம்பகத் தன்மையை நொறுக்கும் வகையில் அமைந்தது. எனவே சஸ்பெண்ட் முடிவை எடுத்தோம். ஆதவ் அர்ஜூனாவுக்கு பலமுறை வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கினோம்.
நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என ஆதவ் அர்ஜூனாவிடம் அறிவுறுத்தி இருந்தோம். 6 மாத இடைநீக்கத்தில் ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள் பொறுத்தே அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பா.ஜ., அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று முதலில் அண்ணாமலை சொல்ல வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.