Paristamil Navigation Paristamil advert login

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்பட்டால் பதவி விலகுவேன்

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்பட்டால் பதவி விலகுவேன்

10 மார்கழி 2024 செவ்வாய் 03:31 | பார்வைகள் : 667


மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தர மாட்டோம். அதையும் மீறி சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்,'' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, 'இந்துஸ்தான் ஜிங்க்' என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதை ரத்து செய்யக்கோரி நேற்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபை முன்னவரான துரைமுருகன் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:


எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, பிரதமருக்கு நவம்பர் 20ல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். பார்லிமென்டில் சட்ட திருத்தம் வந்தபோதே, தமிழக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதை செய்ய தவறி விட்டனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய அரசு கருத்து கேட்டபோதே எதிர்ப்பை தெரிவித்து விட்டோம். தமிழக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சட்ட திருத்தத்தை நிறைவேற்றிஉள்ளது.

பழனிசாமி: சுரங்கத்திற்கு பிப்ரவரி மாதம் 'டெண்டர்' கோரப்பட்டது. அதன் பின், 10 மாதம் வரை தமிழக அரசு அமைதியாக இருந்துள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின், பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

கருத்து கேட்டபோது தமிழகம் எதிர்க்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. மாநில அரசு உரிய நேரத்தில் தன் கருத்தை தெரிவிக்காததால், இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

துரைமுருகன்: மத்திய அரசு கேட்டபோது, தெளிவாக கூறி விட்டோம். மாநில கட்டுப்பாட்டில் நில உரிமைகள் உள்ளன. எனவே, சுரங்க குத்தகை வழங்கும் அதிகாரத்தையும் மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுஉள்ளோம்.

பழனிசாமி: கடிதம் எழுதியதாக சொன்னீர்கள்; என்ன எழுதினீர்கள் என்பதை சொன்னால் தானே தெரியும்.

துரைமுருகன்: நீங்கள் முதல்வராக இருக்கும்போது, மத்திய அரசுக்கு எத்தனையோ கடிதம் எழுதினீர்கள். அவற்றில் ஒன்றாவது எங்களுக்கு கொடுத்தீர்களா? இல்லையே...

பழனிசாமி: இது முக்கியமான பிரச்னை; மக்கள் வாழ்வாதார பிரச்னை. நீங்கள் தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் எதுவும் பேசக்கூடாதா; இது என்னங்க நியாயம்?

ஸ்டாலின்: மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போது, அதன் விபரம் தமிழக அரசால் செய்திக் குறிப்பாக வெளியிடப்படுகிறது. இது, பழனிசாமிக்கு தெரியவில்லை.

பழனிசாமி: ஏலம் விடுவது வரை, 10 மாதங்கள் என்ன செய்தீர்கள் என்று தான் கேட்கிறேன். சட்ட திருத்தம் வந்தபோதே அழுத்தம் கொடுத்திருந்தால், சட்டம் நிறைவேறி இருக்காது.

ஸ்டாலின்: வேகமாக பேசுவதால், சாதித்ததாக நினைக்க வேண்டாம். எங்கள் ஆதரவில் சட்டம் நிறைவேறவில்லை; மெஜாரிட்டி அடிப்படையில் நிறைவேறியுள்ளது. அவர்கள் ஏலம் விட்டாலும், நாங்கள் சுரங்கம் தோண்ட அனுமதி தர மாட்டோம். நான் முதல்வராக இருக்கும் வரை, சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்.

பழனிசாமி: அரசு அலட்சியமாக இருந்ததால், இவ்வளவு பிரச்னை வந்துள்ளது.

துரைமுருகன்: 'நான் முதல்வராக இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டேன்' என, முதல்வர் பிரகடனம் செய்து விட்டார். இன்னமும் நீங்கள் சந்தேகித்தால், சுரங்க நிறுவனத்தை நீங்கள் ஆதரிப்பதாக தெரியும்.

பழனிசாமி: நீங்கள் தான் அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக 10 மாதம் சும்மா இருந்ததாக மக்கள் பேசுகின்றனர்.

ஸ்டாலின்: உங்கள் பார்வையில் நாங்கள் அலட்சியமாக இருந்ததாக தெரியலாம். ஆனால், எதிர்ப்பை நாங்கள் கடுமையாக பதிவு செய்துள்ளோம். அதையும் மீறி டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால், நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன். எனவே, எதிர்க்கட்சியும் சேர்ந்து, இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தர வேண்டும்.

துரைமுருகன்: ஏலம் விடும் அதிகாரம் மட்டும் தான் மத்திய அரசிடம் உள்ளது. அதை குத்தகை விடும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. ஆகவே, சுரங்கத்தை முதல்வர் அனுமதிக்க மாட்டார்.

பழனிசாமி: மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமானாலும், அ.தி.மு.க., அனுமதிக்காது. அதை தடுத்து நிறுத்துவதற்கு, தமிழக அரசு கொண்டு வந்த இந்த தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்கிறது.

இவ்வாறு விவாதம் நடந்த பின், குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ., ஏற்கிறதா, எதிர்க்கிறதா?

நயினார் நாகேந்திரன்: இது சாதாரண விஷயம். சுரங்கம் தொடர்பாக மாநில அரசிடம், மத்திய அரசு கருத்து கேட்டபோதே, வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ராஜஸ்தானில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது; அங்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்களும் மத்திய அரசிடம் பேசியுள்ளோம்; நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.முதல்வர்: தீர்மானத்தை பா.ஜ., ஏற்கிறதா, எதிர்க்கிறதா?நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் பா.ஜ., ஆதரிக்காது.சபாநாயகர்: அப்படி என்றால், தீர்மானத்துக்கு பா.ஜ., ஆதரவு என்று எடுத்துக் கொள்ளலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்