சூரிக்கு ஜோடியாகும் பொன்னியின் செல்வன் நாயகி
10 மார்கழி 2024 செவ்வாய் 04:23 | பார்வைகள் : 416
தமிழ் திரையுலகில் காமெடியனாக கலக்கி வந்தவர் சூரி, அவர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகின்றன. அதை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும் சூரி, கருடன், கொட்டுக்காளி என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். அதிலும் கொட்டுக்காளி திரைப்படம் உலகளவில் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.
தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. விடுதலை 2 படத்திற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் சூரி. இதைத் தொடர்ந்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ், விமல் நடித்த விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கியவர் ஆவார்.
இப்படத்திற்காக அதிகளவில் தாடி வளர்த்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் சூரி. இந்நிலையில், இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளது யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் இதில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் மூலம் முதன்முறையாக சூரியும் ஐஸ்வர்யாவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர் சி இயக்கிய ஆக்ஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த அவருக்கு பொன்னியின் செல்வன் படம் தான் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்படம் வருகிற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.