Paristamil Navigation Paristamil advert login

அதானியை சந்திக்கவில்லை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதானியை சந்திக்கவில்லை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

11 மார்கழி 2024 புதன் 03:08 | பார்வைகள் : 434


என்னை வந்து அதானி சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் அதானி குழும முதலீடு தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் அப்போது பேசியதாவது: அதானி முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தகவல் குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அதற்கு பிறகும், இது பற்றி செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதானி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பார்லிமென்டில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

பா.ஜ., பா.ம.க., தயாரா?

தி.மு.க., மீது குறை சொல்லி கொண்டு இருக்கும் பா.ஜ.,வோ, பா.ம.க.,வோ, பார்லிமென்டில் இந்த கோரிக்கை ஆதரிக்க தயாராக இருக்கிறதா? இந்த கேள்வியை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன். இப்போதும் சொல்கிறேன். தமிழகத்திற்கும் அதானிக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை. இதை விட வேற விளக்கம் தேவையா ?

விசாரணை குழு

ஏற்கனவே இதை நான் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். இது குறித்து பார்லிமென்டில் இன்னைக்கு இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம், ஆளும் பி.ஜே.பி., ஆட்சியை பார்த்து, விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறார்கள். இதனை ஆதரித்து பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது ஆகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

பா.ம.க., வெளிநடப்பு

சட்டசபையில், அதானி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் திருப்திகரமாக இல்லை எனக் கூறி, பா.ம.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்