எவ்வளவு நாள்தான் இலவசம் தருவீர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்' சுப்ரீம் கோர்ட் கருத்து
11 மார்கழி 2024 புதன் 03:13 | பார்வைகள் : 484
இன்னும் எவ்வளவு நாள்தான் இலவச ரேஷன் தருவீர்கள். அதற்கு பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்' என, புலம்பெயர்ந்தோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
80 கோடி மக்கள்
கொரோனா பரவல் காலத்தின்போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் கிடைப்பது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன.
அப்போது, நாட்டின் எந்த இடத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கும் வசதியை ஏற்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்படுகிறது,” என, குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், “இருப்பினும், 2 - - 3 கோடி மக்களுக்கு இதுவரை ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை,” என, வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியதாவது:
இன்னும் எத்தனை காலத்துக்குதான் இலவச ரேஷன் பொருட்களை வழங்குவீர்கள். அதற்கு மாற்றாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
மத்திய அரசு கவனம்
இந்தளவுக்கு அதிகமான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டால், மாநில அரசுகள் ரேஷன் அட்டைகளை தொடர்ந்து வினியோகிக்கும். ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்குகிறது என்பதால், மாநில அரசுகள் இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளன.
இதையே, மாநில அரசுகள் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறினால், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை கூறுவர்.
அதிகளவு ரேஷன் கார்டுகளை வினியோகிப்பதால், இலவச ரேஷனையும் மாநிலங்களே வழங்க வேண்டும் என்று உத்தரவிடலாமா?
இதனால், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியது.
வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.