Paristamil Navigation Paristamil advert login

இண்டி கூட்டணியில் மம்தாவை தலைவராக்க பெருகுகிறது ஆதரவு

இண்டி கூட்டணியில் மம்தாவை தலைவராக்க பெருகுகிறது ஆதரவு

11 மார்கழி 2024 புதன் 03:15 | பார்வைகள் : 482


எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை ஏற்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது. காங்கிரசின் முக்கியத்துவத்தை குறைக்கும் இந்த முயற்சி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபாவுக்கு இந்தஆண்டு நடந்த தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகள் நடந்தன. அதையடுத்து, 18 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி உருவானது.

இதில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிரிவு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு, தி.மு.க., ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்று உள்ளன.

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு, இண்டி கூட்டணியின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றதை அடுத்து, ராகுல் எதிர்க்கட்சி தலைவரானார்.

ஆனால், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது. அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளும் தோல்வி அடைந்தன.

இதனால், ராகுல் தலைமை மீது நம்பிக்கை சரிந்தது. பார்லிமென்டில் மோடி- -- அதானி விவகாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, ராகுல் தலைமையில் தொடர் போராட்டம் நடப்பதும் இண்டி கூட்டணி கட்சிகளுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. வேறு எந்த பிரச்னை குறித்தும் பேச முடியவில்லை என, திரிணமுல் காங்கிரஸ் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தது.


''கூட்டணி என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். வாய்ப்பு வந்தால், கூட்டணியை வழிநடத்த நான் தயார்,'' என, மம்தா தெரிவித்தார். அவர் கொளுத்தி போட்டது, தற்போது சரவெடியாக மாறியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், 'கூட்டணி தலைவராகும் தகுதி மம்தாவுக்கு உண்டு' என்றார். சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அதை ஆமோதித்தார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் களம் இறங்கினார். ''கூட்டணி தலைமையை மம்தா ஏற்க வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு எதுவும் செய்யாது. மம்தாவுக்கு எங்கள் ஆதரவு உள்ளது,'' என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், ராகுலை தவிர இன்னொருவர் தலைமையை ஏற்க கூட்டணியில் எத்தனை கட்சிகள் சம்மதிக்கும் என்ற கேள்வி, குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசுக்கு பரம எதிரிகளாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், கூட்டணியில் மம்தா தலைமையை ஏற்குமா என்ற கேள்வி மிரட்டுகிறது. காங்கிரஸ் தலைமையை ஏற்றுக் கொண்ட தி.மு.க.,வும், மாநில கட்சியின் தலைவரான மம்தா தலைமையை ஏற்குமா என்பதும் சந்தேகம்.

ராகுலின் தன்னிச்சையான செயல்பாடு, இண்டி கூட்டணியின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியிருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது என, சில மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் முடிவு என்ன?

'இண்டி' கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக இருப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவித்ததை, கூட்டணியில் உள்ள பல கட்சிகள் வரவேற்றுள்ளன.இந்த நிலையில், இண்டி கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல், மம்தா ஆகிய இருவருக்கும் நெருக்கமானவராக கருதப்படுவதால் ஸ்டாலின் எடுக்கும் நிலை என்ன என்பதில், பலரது கவனமும் திரும்பியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்