வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: மம்தா கோரிக்கை
12 மார்கழி 2024 வியாழன் 01:55 | பார்வைகள் : 127
வங்கதேசத்தில் இருந்து இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், இஸ்கான் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது, அதைத் தொடர்ந்து ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் தலையிட்டு, வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களை காப்பாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை எழுந்தது. சமீபத்தில் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, டாக்கா சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: வங்கதேசத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், இந்தியா திரும்ப விரும்புபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இந்தியா வங்கதேச எல்லை ஒன்று கூட முடப்படவில்லை. அப்படி மூடியிருந்தால் தகவல் வந்து இருக்கும். இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.