விரைவில் சாதகமான முடிவு; டங்ஸ்டன் சுரங்கம் குறித்து அண்ணாமலை உறுதி
13 மார்கழி 2024 வெள்ளி 06:25 | பார்வைகள் : 191
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார். பின்னர், அவர் விரைவில் சாதகமான முடிவு வரும் என உறுதி அளித்தார்.
அவரது அறிக்கை:
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று நாம் ஏற்கனவே விடுத்த கோரிக்கை தொடர்பாக, மதுரை மாவட்ட சகோதர சகோதரிகள் சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் நானும் இன்று டில்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசினோம்.
அவர், எங்கள் கோரிக்கைகளையும், தி.மு.க., அரசு வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை கொடுத்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புக்கு வழிவகுத்தது குறித்தும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். மேலும், சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் அறிவிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளின் காலவரிசையை எங்களுக்கு விரிவாக விளக்கியதுடன், மக்களின் நலன் சார்ந்த சாதகமான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் மனதில் கொண்டவர். எனவே, அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் இன்னல்களுக்கு, நிச்சயம் சாதகமான தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.