Paristamil Navigation Paristamil advert login

பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

13 மார்கழி 2024 வெள்ளி 06:28 | பார்வைகள் : 239


பார்லிமென்டுக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்டம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்தக் குழு தன் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

இதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சாத்தியம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என்றும், அதற்காக பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக, பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். இந்த தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள், மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தலாம். அடுத்த கட்டத்தில், இவற்றை ஒருங்கிணைத்து தேர்தல் நடத்தலாம் என, பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கான வரைவு, பார்லிமென்டின் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 20ம் தேதி வரை பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்க உள்ளது.

இதற்கிடையே, அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விவாதங்கள் நடக்க உள்ளன.

அதனால், ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்கள் மீது, இந்த கூட்டத் தொடரில் விவாதங்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை.

ஆனால், இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதனால், பார்லிமென்ட் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்படும்.

மேலும், இந்த திட்டம் தொடர்பாக, மாநில சட்டசபை சபாநாயகர்களின் கருத்துக்களை கேட்கவும் மத்திய அரசு விரும்புகிறது. அது, பார்லிமென்ட் குழுவின் வாயிலாக செயல்படுத்தப்படும்.

லோக்சபா, சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என, நிபுணர் குழு தன் அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்காக, மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

லோக்சபா மற்றும் சட்டசபைகளின் பதவிக்காலம் தொடர்பான மசோதாக்களுக்கு, 50 சதவீத மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. அதே நேரத்தில், மாநகராட்சி தேர்தல் தொடர்பான மசோதா, மாநிலங்கள் தொடர்புடையது என்பதால், 50 சதவீத மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டும்.

யூனியன் பிரதேசங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் என்பது சாதாரண மசோதா தான். அதனால், அதற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை.

சாதகங்கள்!

* பல மாதங்கள், ஆண்டுகள் இடைவெளி இல்லாமல், லோக்சபா மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்* ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதால் அரசுக்கான செலவுகள் குறையும்* அரசு நிர்வாக பணிகளில் பாதிப்பு ஏற்படுவது வெகுவாக குறையும்* தேர்தல் நடைமுறையில் பல சீர்திருத்தங்கள் ஏற்படும்.சவால்கள்!* சட்டத் திருத்தங்களுக்கு பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் ஒப்புதல் பெறுவது* சில மாநில சட்டசபைகளின் காலம் குறையும் என்பதால், கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்* சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின்போது வாக்காளர்களின் மனநிலை வேறுபடும். ஒரே நேரத்தில் நடந்தால், சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்