பிரெஞ்சுத் தீவை சூறையாடும் சூறாவளி.. இருவர் பலி... விமான நிலையத்தில் பலத்த சேதம்!!
14 மார்கழி 2024 சனி 17:01 | பார்வைகள் : 452
பிரெஞ்சுத் தீவான Mayotte இனை சூறாவளி தாக்கி வருகிறது. அங்கு அதிகபட்ச ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிடோ சூறாவளி (cyclone Chido) என பெயரிடப்பட்ட இந்த சூறாவளி கிட்டத்தட்ட மொத்த தீவினையும் சூறையாடியுள்ளதாகவும், கிட்டத்தட்ட தீவின் பெரும்பான்மையான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகள் சேதமடைந்து, மரங்கள் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த சூறாவளியினால் இதுவரை இருவர் பலியாகியுள்ளனர்.
தகரங்கள் காற்றில் பறப்பதையும், வீடுகள் சேதமடைந்துள்ளதையும் காணொளிகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
விமான நிலைய செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் குப்பை கூழங்கள் சேர்ந்துள்ளதாகவும், மரங்கள் முறிந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பிரான்சுவா பெய்ரு அவர்கள் இது தொடர்பில் அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.