Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்

15 மார்கழி 2024 ஞாயிறு 03:52 | பார்வைகள் : 172


ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் அமளியின்றி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தது.

அறிக்கை

அந்தக் குழுவினர் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை, பல கட்டங்களாக செயல்படுத்தலாம்; அதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது.

மசோதாவுக்கு, கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா, 2024 ஆகிய இரண்டையும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் லோக் சபாவில் நாளை தாக்கல் செய்கிறார்.

மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும்.

சந்தேகம்

மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு விரும்புவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்து, தொழில் அதிபர் அதானி விவகாரத்தை மையமாக வைத்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபடுகின்றன.

பதிலுக்கு, 'இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அமைப்புடன் சோனியாவிற்கு தொடர்பு உள்ளது' என, பா.ஜ., எதிர் அமளியில் ஈடுபடுகிறது.

இதனால், ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான சட்ட மசோதா மீதான விவாதம், லோக்சபாவில் அமளி யின்றி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கூட்டம் ஒத்திவைப்பு

தி.மு.க., தலைமை செயற்குழு கூட்டம், கன மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.'தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும் 18ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கன மழை எச்சரிக்கையாலும், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தி.மு.க., உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டிஇருப்பதாலும், செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது' என அவர் கூறியுள்ளார்.ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாக்களை அவசரமாக நிறைவேற்ற, பா.ஜ., அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து, முழு மூச்சுடன் அதை தடுக்க வேண்டும் என்பதற்காக, கட்சியின் எம்.பி.,க்கள் டில்லியை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்