சருமம் வறட்சி அடைய காரணங்கள்...
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10531
சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படும். அதிலும் இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். இத்தகைய வறட்சியைப் போக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கோல்டு க்ரீம்களைப் பூசிக்கொள்வோம்.
இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை (dermatitis) ஏற்படுத்திவிடும். இத்தகைய வறண்ட சருமத்திட்டுக்கள், உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மேலும் எதனால் இந்தகைய சரும வறட்சி ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்...
• ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். ஏனெனில் உலர்ந்த காற்றானது சருமத்திலுள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி சருமம் களையிழக்கச் செய்யும்.
• தினமும் வெந்நீரில் குளித்து வந்தால் சருமம் விரைவில் வறட்சியடையும்.. பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்ப் பசையானது, சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவும். ஆனால் வெந்நீரில் நீண்ட நேரம் இருப்பதால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் வெளியேற்றி உலரச் செய்துவிடுகிறது.
• தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், வறண்ட சருமத்திற்குக் மிக முக்கிய காரணமாகும். இது சருமத்தில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடுகிறது.
• பலவகையான சோப்புக்களைப் பயன்படுத்துதலும், சரும வறட்சி ஏற்பட காரணமாக அமைகிறது. அடிக்கடி சருமத்திற்கு சோப்பை பயன்படுத்தும் போது சருமத்தின் எண்ணெய்ப் பசையை போய்விடுகிறது. கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவதாலும், சருமம் மிகவும் வறண்டு போகும்.
இதனால் மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் கலந்த சோப்புகள்/ஹேண்ட் வாஷ் மற்றும் கிளீன்ஸர்களையும் பயன்படுத்துவது நல்லது. மிக அதிகமாக சருமத்தை ஸ்க்ரப் செய்வதாலும், சருமம் வறண்டுவிடும். எனவே ஸ்கரப் செய்யும் போது கைகளையோ அல்லது மெல்லிய ஸ்கரப்பர்களையோ பயன்படுத்த வேண்டும்.