வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு நிர்வாகத்தில் சீர்திருத்தம் முக்கியம்; பிரதமர் மோடி உறுதி
16 மார்கழி 2024 திங்கள் 03:07 | பார்வைகள் : 258
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, நிர்வாகத்தில் சீர்திருத்தம் முக்கியம்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடில்லியில் நடந்த தலைமை செயலாளர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அவர் தலைமை செயலாளர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியம் கூட்டு நிர்வாகம். நிர்வாகத்தில் சீர்திருத்தம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உதவுகிறது. அரசின் செயல்திறன் உள்ளிட்டவற்றை மக்களுக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும்.
மாநிலங்களின் நிர்வாகத்தில் கட்டாயம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சியை மேம்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம். சிறப்பான நிர்வாகத்திற்கு உள்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சிறிய நகரங்களில் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற இடங்களை கண்டறிந்து, அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்களின் மூத்த அதிகாரிகள், கள வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.