அமெரிக்காவை போன்ற நிலையை இந்திய பார்லி.,யிலும் கொண்டு வர பா.ஜ., திட்டம்
16 மார்கழி 2024 திங்கள் 03:16 | பார்வைகள் : 263
ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், எங்களை பற்றி முரண்பாடான கருத்தை கூறுவது தவறு,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' சட்ட மசோதாவை நிறைவேற்ற நினைக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை போற்றி, புகழ்ந்து கொண்டே அரசியல் அமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பா.ஜ., அரசு நடத்தி வருகிறது.
எனவே, தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, இந்த ஆபத்தை தடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் அணி திரள வேண்டும். இது குறித்து விவாதத்தில், பார்லிமென்டில் கருத்துக்களை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை.
தமிழகம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு 2,475 கோடி வெள்ள நிவாரணம் கேட்டதற்கு, அதை அலட்சியப்படுத்தி 944.80 கோடி ரூபாயை கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான உரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்து கூறினால், ஒன்று, இரண்டு என குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை.
அரசியல் அமைப்பு சட்டத்தை, 13 நீதிபதிகளை கொண்ட அமர்வு திருத்தம் செய்யலாம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால், அதன் அடிப்படை கூறுகளில் கை வைக்கக்கூடாது. அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் உள்ளது. பா.ஜ., அரசு தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி, அதன் அதிகாரத்தையே பறிக்கிறது.
அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கான அச்சாரமே, ஒரே நாடு; ஒரே தேர்தல் அணுகுமுறை.
அமெரிக்காவை போன்ற நிலையை, இந்திய பார்லிமென்டிலும் கொண்டு வர வேண்டும் என்பதுதான், பா.ஜ.,வின்திட்டம்.
கட்சியின் துணை பொதுச்செயலராக இருந்த ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், எங்களை பற்றி முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. அவரை இடை நீக்கம் செய்தது, என் சுதந்திரமான முடிவு.
மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால், ஆறு மாதம் ஆதவ் அமைதியாக இருக்க வேண்டும். திரும்பவும் முரண்பாடான கருத்துக்களை சொல்வது, அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதை உணர முடிகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.