'சூர்யா 45' படத்தில் ஆர்ஜே பாலாஜியின் திட்டம் தான் என்ன?
16 மார்கழி 2024 திங்கள் 14:49 | பார்வைகள் : 219
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45-வது திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், நேற்று இந்த படத்தில் ’லப்பர் பந்து’ படத்தில் நடித்த ஸ்வாசிகா இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 45-வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னால், த்ரிஷா இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் என்றும், அவருடைய பிறந்த நாளும் இந்த படக்குழுவினருடன் கொண்டாடப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ’லப்பர் பந்து திரைப்படத்தில் யசோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வாசிகா இரண்டாவது நாயகியாக இணைந்தார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது நாயகியாக ஸ்வேதா இணைகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே "அதே கண்கள்", "தீரா காதல்", "கருடன்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் 45-வது திரைப்படத்திலும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, இந்த படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.