Paristamil Navigation Paristamil advert login

நேரு எழுதிய கடிதங்களை கொடுங்க ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை

நேரு எழுதிய கடிதங்களை கொடுங்க ராகுலுக்கு மத்திய அரசு கோரிக்கை

17 மார்கழி 2024 செவ்வாய் 03:05 | பார்வைகள் : 256


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதங்களை அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்கும்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டில்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் இது செயல்பட்டு வந்தது.

அருங்காட்சியகம்

கடந்த 1971ல், நேருவின் வாரிசான, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, தன்னிடம் இருந்த நேரு தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதற்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கினார்.

மொத்தம், 51 பெட்டிகளில் நேரு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில், பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு நேரு எழுதிய கடிதங்களும் அடங்கும்.

ஜெயபிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், அருணா ஆசிப் அலி, பாபு ஜகஜீவன் ராம் போன்ற தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவற்றில் அடங்கும்.

கடந்த 1984ல் இந்தி ராவின் மறைவுக்குப் பின், நேருவின் வாரிசாக சோனியா மாறினார்.

கடந்த 2008ல், ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்கிய, 51 பெட்டிகளில் உள்ள பொருட்களை அவர் திரும்பப் பெற்றார். தற்போது அவரது தனிப்பட்ட பராமரிப்பில் உள்ளன.

ஆவணங்கள்

தற்போது இந்த அருங்காட்சியகத்தை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு அனைத்து பிரதமர்கள் தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நேரு தொடர்பான கடிதங்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப அளிக்கும்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் கடந்தாண்டு செப்டம்பரில் கடிதம் எழுதியது.

ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து, நேரு குடும்பத்தின் மற்றொரு வாரிசான, சோனியாவின் மகன் ராகுலுக்கு, மத்திய அரசு தற்போது கடிதம் எழுதியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் அறக்கட்டளையில், 29 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஒருவரான வரலாற்று ஆய்வாளர் ரிஸ்வான் காத்ரி, காங்கிரசின் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:முன்னாள் பிரதமர் நேரு எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை, தங்களுடைய தனிப்பட்ட பராமரிப்பில் உள்ளன. இவை வரலாற்று சிறப்புமிக்கவை. இவை தொடர்பான தகவல்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த உதவ வேண்டும்.நேருவின் கடிதங்கள் உள்ளிட்டவை, உங்களுடைய குடும்பத்தின் தனிப்பட்ட உரிமையாகும். இருப்பினும், வரலாற்று ஆய்வுகள் மற்றும் எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், அந்த கடிதங்கள் உள்ளிட்டவற்றை, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்க வேண்டும் அல்லது டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்