செந்தில் பாலாஜி வழக்கு; மேலும் 150 பேருக்கு சம்மன்
17 மார்கழி 2024 செவ்வாய் 03:14 | பார்வைகள் : 255
போக்குவரத்து துறை பணி நியமன மோசடி புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மேலும், 150 பேருக்கு, 'சம்மன்' அனுப்ப, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011 - -15ல், போக்குவரத்து துறையில் பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
மொத்தமுள்ள நான்கு வழக்குகளில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மூன்று வழக்குகளிலும், முதல் நபராக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கில், எம்.பி., - எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்; அதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு விசாரணையின் போதும், 100 பேர், 150 பேர் என, மொத்தமாக ஆஜராகும் வகையில், சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அதேபோல, ஏற்கனவே சம்மன் பெற்ற, 145 பேர் ஆஜராகினர்.
இதையடுத்து, இவ்வழக்கில் மேலும், 150 பேருக்கும், சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி, 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
மேலும், ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்டோர் ஆஜராகுவதால், நீதிமன்ற வளாகத்தில் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை தவிர்த்து, ஏற்கனவே ஆஜரான 149 பேர், அடுத்த விசாரணையின் போது ஆஜராக விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார்.