Paristamil Navigation Paristamil advert login

யாழில் அத்துமீறி நுழைந்த வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை

யாழில் அத்துமீறி நுழைந்த வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை

17 மார்கழி 2024 செவ்வாய் 11:10 | பார்வைகள் : 3090


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா 100,000 ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்து வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோthu, குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர் மற்றும் சட்டத்தரணி ஆகிய இருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , வைத்தியசாலைக்குள் பணிப்பாளரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைத்தல், முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்திய நீதவான் , சந்தேக நபர்களை தலா 100,000 ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.

குறித்த வழக்கினை மேற்கொண்டு நடாத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெறுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதவான் , வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று எம்.பி.யிடம் தெரிவித்துள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ்.பொலிஸாரிடம் எம்.பி.யை ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது. 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்