Paristamil Navigation Paristamil advert login

அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெரும் அமளி

அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெரும் அமளி

19 மார்கழி 2024 வியாழன் 03:20 | பார்வைகள் : 140


சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக பேசியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால், பார்லிமென்டின் இரு சபைகளும் நேற்று முடங்கின.

அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழா விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் பேசும் போது, 'இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும், 'அம்பேத்கர்... அம்பேத்கர்...' என பேசுவது, 'பேஷன்' ஆகிவிட்டது.

'இதை சொல்வதற்கு பதிலாக, கடவுளின் நாமத்தை உச்சரித்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்.

'இருந்தாலும், அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது உச்சரிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனாலும், உண்மையான உணர்வுகளுடன் அவர்கள் செயல்பட வேண்டும்' என்றார்.

அமித் ஷாவின் இந்த பேச்சு, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்ட் முன் நேற்று காலை கூடினர்; கைகளில் அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தியபடி, 'ஜெய்பீம்' என்ற கோஷங்களை எழுப்பினர்.

'அம்பேத்கர் பெயரை திரும்பத் திரும்ப உச்சரிப்போம்; அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும்; அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின், 11:00 மணிக்கு அலுவல்கள் துவங்கியதும், லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜெய்பீம் முழக்கங்களுடன் கடும் அமளியில் இறங்கின.

சபாநாயகர் இருக்கை முன் ஆவேசமாக திரண்டு, அமித் ஷாவின் பேச்சை கண்டித்து குரல் எழுப்பினர். இதனால், சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மதியம் 2:00 மணிக்கு லோக்சபா கூடியபோது, மீண்டும் அதே காட்சிகள் அரங்கேறியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபாவிலும், அலுவல் துவங்கியதுமே இந்த பிரச்னை வெடித்தது. உள்துறை அமைச்சரை கண்டித்து கோஷங்களும், அம்பேத்கரை புகழ்ந்து முழக்கங்களும் சபையில் எதிரொலித்தன. இந்த ஆவேச அமளியை அடுத்து,ராஜ்யசபாவும் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சபை கூடியதும், எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்தன. அப்போது பேசிய சபை தலைவர் ஜக்தீப் தன்கர், ''அண்ணல் அம்பேத்கர் மிகுந்த மரியாதைக்குரியவர். நம் நாட்டின் மிக உயர்ந்த தலைவர். எப்போதுமே மதிப்புமிக்க இடத்தில்தான் அவர் இருக்கிறார்,'' எனப் பேசத் துவங்கியதும், 'அதையெல்லாம் ஏற்க முடியாது. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' எனக்கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் இறங்கினர்.

அப்போது பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் மதித்ததில்லை. நேரு ஆட்சியில், அம்பேத்கரை பல விஷயங்களில் காங்கிரஸ் அவமானப்படுத்தியது. தேர்தல்களில் அம்பேத்கருக்கு எதிராக வேலை செய்தது.

''அடுத்தடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதும், அவருக்கு பாரத ரத்னா வழங்க முன்வரவில்லை. பார்லிமென்டின் மைய மண்டபத்தில் அவரது புகைப்படம் வைக்கப்படவில்லை. அப்படிப்பட்ட காங்கிரஸ், இன்று அவர் மீது மரியாதை காட்டுவதாக நாடகமாடுகிறது,'' என்றார்.

அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''பிரச்னையை திசை திருப்ப வேண்டாம். அம்பேத்கரை அவமதித்து அமித் ஷா பேசியதற்கு என்ன பதில்? அது குறித்து பேசுங்கள். அவரது பேச்சை நாங்கள் ஏற்க மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டாக வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியிலும் அவரை நீடிக்க விடமாட்டோம்,'' என்றார்.

அப்போது பேசிய சபை முன்னவர் ஜே.பி.நட்டா, ''அம்பேத்கர் விஷயத்தில் காங்கிரஸ் நாடகமாடுகிறது. அம்பேத்கரை ஒருபோதும் மதிக்காத காங்கிரஸ், இப்போது வேண்டுமென்றே வீண்பழி சுமத்துவதோடு, அவரை வைத்து அரசியல் லாபங்களுக்காக அமளி செய்கிறது,'' என்றார்.

இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., - எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டதால் ராஜ்யசபாவும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

அம்பேத்கரை அவமதித்த காங்.,

பிரதமர் மோடி ஆவேசம்பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட சமூகவலைதள பதில் கூறப்பட்டுள்ளதாவது:அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ் கட்சியின் இருண்ட வரலாற்றைத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பலப்படுத்தி உள்ளார். அவர் முன்வைத்த உண்மைகளால், அவர்கள் திகைத்துப் போயுள்ளனர். அதனால் தான் இப்போது இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும்.அம்பேத்கரை அவமதித்ததை தங்களின் பொய்களால் மறைத்துவிடலாம் என காங்கிரஸ் கட்சி நினைத்தால், அது முற்றிலும் தவறானது.ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு கட்சி, அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினரை அவமானப்படுத்தவும் கேவலமான தந்திரங்களில் ஈடுபட்டதை, மக்கள் தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளனர்.அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி இரண்டு முறை தேர்தலில் தோல்வி அடைய செய்துள்ளது. தன்னுடைய கவுரவத்துக்காக, அம்பேத்கருக்கு எதிராக அப்போதைய பிரதமர் நேரு பிரசாரம் செய்தார். அப்பேத்கருக்கு, பாரத ரத்னா மறுக்கப்பட்டது. பார்லிமென்டின் மத்திய அரங்கில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு எதிராக நடந்த அடக்குமுறைகளையும், படுகொலைகளையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அம்பேத்கர் இல்லையெனில் நாம் இன்றைக்கு இந்த இடத்தில் இருக்க முடியாது. அவரது கனவுகளை நனவாக்க இந்த அரசு, கடந்த 10 ஆண்டுகளாக அயராது உழைத்துள்ளது.அம்பேத்கர் உடல் தகனம் செய்யப்பட்ட, 'சைத்ய பூமி'யில் இருந்த நிலப் பிரச்னையை, எங்கள் அரசு தீர்த்து வைத்தது. அம்பேத்கர் கடைசி காலத்தில் வாழ்ந்த டில்லி, அலிப்புர் சாலை வீட்டை புணரமைத்தோம். லண்டனில் அவர் வாழ்ந்த வீட்டை, மத்திய அரசு கையகப்படுத்தி உள்ளது. அம்பேத்கருக்கு இந்த அரசு எப்போதும் மதிப்பும், மரியாதையும் கொடுத்து வந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


'அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்'

லோக்சபா எதிக்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது:அம்பேத்கருக்கும், அவரது கொள்கைகளுக்கும் பா.ஜ., எப்போதுமே எதிரானது. அரசியலமைப்பை வடிவமைத்து நம் நாட்டுக்கு வழிகாட்டிய சிற்பி அவமதிக்கப்படுவதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

என் பேச்சை காங்கிரஸ் திரித்து விட்டது

அமைச்சர் அமித் ஷா விளக்கம்டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா அளித்த விளக்கம்:என் பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து குறை கூறுகின்றனர். என் பேச்சை காங்., திரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர், அரசியலமைப்பு சட்டம், இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு காங்கிரஸ் எதிரானது. இந்த உண்மைகளை பா.ஜ., அம்பலப்படுத்தியதால், பொறுக்க முடியாத காங்., என் பேச்சை திரித்துள்ளது. அக்கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அம்பேத்கரை மட்டுமல்ல, வீர் சாவர்க்கரையும் காங்., அவமரியாதை செய்துள்ளது. நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. பா.ஜ.,வும், மோடி அரசும் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிக்கிறது. அவரது புகழை உலகம் முழுதும் நிலைநாட்டியது நாங்கள் தான்.கார்கேவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், நான் ராஜினாமா செய்கிறேன்; ஆனால், அது பிரச்னைக்கு தீர்வாகாது. காரணம், அடுத்த 15 ஆண்டுகளுக்கும், அதே எதிர்க்கட்சி வரிசையில் தான், அவர் அமர வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.'

நாட்டை பற்றி கவலைப்படுவோர்அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்!'

* தமிழக முதல்வர் ஸ்டாலின்: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியம் குறித்து கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுவோர், அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வர்; சொல்ல வேண்டும்.

* வி.சி., தலைவர் திருமாவளவன்: அம்பேத்கர் குறித்து நாடே பேசுவதை, சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை, அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தன் முகத்திரையை தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங் பரிவார்களின் உண்மை முகம்.அரசமைப்புச் சட்டமும், அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதை விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. சங் பரிவார்கள், அம்பேத்கரை போற்றுவதெல்லாம், எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்; சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும்

.* அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: இந்தியா முழுதும் போற்றக்கூடிய தலைவர் அம்பேத்கர். மக்களால் பெரிதும் மதிக்கப்படும் அவரை யார் சிறுமைப்படுத்தினாலும், அதை அ.தி.மு.க., ஏற்காது.அம்பேத்கரை போற்ற வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்தும் செயலை செய்வது பின்விளைவுகளையே ஏற்படுத்தும். அம்பேத்கரை பற்றிய அமித்ஷாவின் பேச்சை மக்கள் ஏற்க மாட்டார்கள். இதனால், பா.ஜ.,வுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

* தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: உள்துறை அமைச்சர் அமித்ஷா எதுவும் தவறாக பேசவில்லை. 'எதிர்க்கட்சிகள் அம்பேத்கர் பெயரை உண்மையாக பயன்படுத்தவில்லை. அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர், உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்' என, அமித்ஷா அவர் பாணியில் பேசினார். அதில் ஒரு சில வார்த்தைகளை வைத்துக் கொண்டு, சிலர் தேவையில்லாத விவாதப் பொருளாக மாற்றி வருகின்றனர்.

* த.வெ.க., தலைவர் விஜய்: யாரோ சிலருக்கு வேண்டுமானால், அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திர காற்றை சுவாசிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும், அவர்கள் உயரத்தில் வைத்து போற்றும், ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை. அம்பேத்கர் பெயரை, உள்ளமும், உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம். எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த, உள்துறை அமைச்சரை கண்டிக்கிறேன்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்