Paristamil Navigation Paristamil advert login

சபைக்கு வராத மத்திய அமைச்சர்கள் விளக்கம் கேட்கிறது பா.ஜ., மேலிடம்

சபைக்கு வராத மத்திய அமைச்சர்கள் விளக்கம் கேட்கிறது பா.ஜ., மேலிடம்

19 மார்கழி 2024 வியாழன் 03:25 | பார்வைகள் : 133


ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதா தாக்கலின் போது, லோக்சபாவுக்கு வராத நான்கு மத்திய அமைச்சர்கள் உட்பட 20 பா.ஜ., - எம்.பி.,க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

ஒரே சமயத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்துவதற்கான ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு லோக்சபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.

பார்லி.,யில் உள்ள நவீன மின்னணு ஓட்டுப்பதிவு வசதி வாயிலாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்.பி.,க்களும், எதிராக 198 பேரும் ஓட்டளித்தனர்.

இந்த ஓட்டெடுப்பின் போது, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரிராஜ் சிங், சி.ஆர்.பாட்டீல் உட்பட 20 பா.ஜ., - எம்.பி.,க்கள் சபைக்கு வராதது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, அனைத்து எம்.பி.,க்களும் அன்றைய தினம் சபைக்கு வர வேண்டும் என பா.ஜ., கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது.

உத்தரவை மீறிய 20 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்லி., கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அது மீண்டும் பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும்.

அப்போது, பா.ஜ., - எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தால், அது பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்