ஏமன் நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்திய இஸ்ரேல்
19 மார்கழி 2024 வியாழன் 09:28 | பார்வைகள் : 364
ஏமன் மீது திடீர் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
ஏமன் நாட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதில் 9 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை ஏமன் நாட்டின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும் ஹவுதி படையினரால் நடத்தப்படும் தொலைக்காட்சியான அல் மசிரா டிவி உறுதிப்படுத்தியுள்ளது.
சலிப் துறைமுகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர், மேலும் 2 பேர் ராஸ் இசா எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு இடங்களும் மேற்கு மாகாணமான ஹொடைடாவில்(Hodeidah) அமைந்து இருப்பதாக அல் மசிரா(Al Masirah) தெரிவித்துள்ளது.
மேலும் தலைநகரான சனாவின் தெற்கிலும், வடக்கிலும் அமைந்துள்ள மத்திய மின் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "சனாவில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்பு உட்பட ஏமனில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகளை துல்லியமாகத் தாக்கியுள்ளோம்" என்று கூறியுள்ளது.
தாக்கப்பட்ட இடங்கள் ஹவுதி படைகளால் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன்னதாக ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.