பரிஸ் : 15 மில்லியன் பெறுமதியான நூதனப்பொருட்கள் திருட்டு!
19 மார்கழி 2024 வியாழன் 17:42 | பார்வைகள் : 734
ஓவியங்கள், சிலைகள் என மிக பெறுமதியான பொருட்கள் பரிசில் உள்ள வீடொன்றில் இருந்து திருடப்பட்டுள்ளன. வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்ததற்குரிய தடயங்கள் எதுவும் இல்லாத நிலையில், மர்மமான முறையில் அவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 16 ஆம், வட்டாரத்தின் avenue Victor-Hugo வீதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 80 வயதுகளையுடைய தம்பதிகளின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியினர் இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இருந்து நாட்டில் இல்லை எனவும், வெளிநாடு ஒன்றில் வசித்ததாகவும், அதன்பின்னர், இந்த வாரம் வீடு திரும்பியிருந்தபோது, நூதனப்பொருட்கள் கொள்ளை போயிருந்ததை அடையாளம் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் பெறுமதி 15 மில்லியன் யூரோக்கள் எனவும், அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள், சிலைகள், நகைகள் போன்றன உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.