Paristamil Navigation Paristamil advert login

ராகுல் மீது போலீசில் புகார்: கொலை முயற்சி

ராகுல் மீது போலீசில் புகார்: கொலை முயற்சி

20 மார்கழி 2024 வெள்ளி 03:42 | பார்வைகள் : 3919


அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் ஏட்டிக்கு போட்டியாக நேற்று நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பா.ஜ., - எம்.பி.,க்கள் இருவர் மண்டை உடைந்தது. இதை தொடர்ந்து, ராகுல் மீது கொலை முயற்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டத்தின் மீதான விவாதம் இரு தினங்களுக்கு முன் நடந்தது.

முடக்கினர்

அப்போது, அம்பேத்கர் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் முழுதும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா, ராஜ்யசபா அலுவல்கள் முற்றிலுமாக முடங்கின.

இந்த விவகாரம் தீவிரமடையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று காலையில் பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் பின்புறம் உள்ள அம்பேத்கர் சிலையருகே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூடினர்.

அங்கு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, கோஷமிட்டபடியே அந்த வட்ட வடிவ கட்டடத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.

அமித் ஷா விவகாரத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதை அறிந்த பா.ஜ., - எம்.பி.,க்களும், அதே மகர் துவார் என்றழைக்கப்படும் பிரதான வாயில் அருகே கூடி, காங்கிரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் ஊர்வலமும் அந்த இடத்திற்கு வந்தடைந்தது. இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. அது மிகச் சிறிய இடம்தான். இரு தரப்புமே அங்கு கூடி மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர்.

மகர் துவார் என்பது படிக்கட்டுகள் நிறைந்த பகுதி. அந்த படிக்கட்டுகளில் ஏறித்தான் பார்லிமென்டின் பிரதான வாயிலை அடைய முடியும்.

போட்டி கோஷம்

அந்த படிக்கட்டுகளை மறித்து நின்றால், போவோர் வருவோருக்கு இடையூறாக இருக்கும். இதனால், படிக்கட்டுகளில் நிற்காமல் சற்று தள்ளி கீழே நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளலாம் என, சபாநாயகர் ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால், பா.ஜ., - எம்.பி.,க்கள் நேற்று அந்த படிக்கட்டுகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்தடைந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு, 11:00 மணிக்கு சபைகளுக்குள் செல்ல முயன்றனர்.

இதனால், இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக மல்லுக்கு நிற்பது போல் போட்டி கோஷங்களை எழுப்பினர். அப்போது இருதரப்பும் ஒருவரை ஒருவர் ஒதுக்கித் தள்ளிவிட்டு படிக்கட்டுகளில்ஏறி உள்ளே செல்ல முயன்றனர். பதிலுக்கு சிலர் மறித்து நின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வாயிலை ஒட்டி பிரிந்து செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி சாய்வு பாதை வழியாக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் மேலே ஏறினர். அப்போது படிக்கட்டுகள் வழியாக ஏறிச்செல்ல ராகுல் முயன்றார். அவருக்கு வழி கிடைக்காததால் அந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில எம்.பி.,க்கள் கீழே விழுந்தனர்.

இதனால் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பா.ஜ., - எம்.பி.,க்கள் சிலர் நெரிசலில் சிக்கி சரிந்து கீழே விழுந்தனர். அதே சமயத்தில் சாய்வு பாதை வழியாக பெரும்பாலானோர் ஏறிச்சென்று அங்கிருக்கும் நுழைவு வாயில் அருகே சென்றுவிட்டனர்.

இன்னும் சிலரோ திடீரென அங்கிருக்கும் கைப்பிடி சுற்றுசுவர் மீது ஏறி நின்று அம்பேத்கர் படங்களுடன் கோஷங்கள் போடத் துவங்கியதும் நிலைமை பரபரப்பானது.

இதற்கிடையில் படிக்கட்டுகளில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கியவர் பா.ஜ., - எம்.பி., பிரதாப் சாரங்கி என்று தெரியவந்தது. அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வழிகிறது என்ற தகவல் அறிந்ததும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதை கேள்விப்பட்டு ராகுல் அங்கு வந்தார். அப்போது, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே ராகுலை நோக்கி ஆவேசத்துடன், ''ராகுல், ரவுடியை போல நடந்து கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா? வயதான ஒருவரை இப்படி தள்ளிவிட்டு காயமடைய செய்துள்ளீர்களே?'' என, கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ''அவர் தான் என்னை தள்ளிவிட்டார்,'' என்று பதில் அளித்த ராகுல், அந்த இடத்தைவிட்டு அமைதியாக திரும்பினார்.

இதில் முக்கிய விஷயம் என்னவெனில், அந்த ஆர்ப்பாட்டம் நடந்த மகர் துவார் படிக்கட்டு, கைப்பிடி சுற்றுச்சுவர் பகுதிகளுக்கு அருகில் எம்.பி.,க்களை தவிர ஊடகத்தினர் உட்பட யாரும் செல்ல முடியாது.

பார்லிமென்ட் பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப்., தன் வசம் எடுத்துக் கொண்டதில் இருந்து, அந்த சிறிய பகுதி முழுதும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி அருகில் கூட செல்ல முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வர். இதனால், ஊடகத்தினர் பல அடி துாரம் தள்ளிதான் நிற்க முடியும்.

அதனால் படிக்கட்டு பகுதியில் யார், யாரை தள்ளி விட்டனர்; யார் கீழே விழுந்தனர், எப்படி விழுந்தனர் என்ற விபரங்களை அறிய முடியவில்லை.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், 11:00 மணிக்கு லோக்சபா கூடியதும் அமளி காரணமாக ஓரிரு நொடிகளில் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் அலுவல்கள் துவங்கியதும், ஜக்தீப் தன்கர், ''உள்துறை அமைச்சர் பேச்சு குறித்து, கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்தை நிராகரிக்கிறேன்,'' என்றார்.

இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதம் செய்யவே சபை உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது.

மதியம் 2:00 மணிக்கு மீண்டும் சபை கூடியபோது இதே பிரச்னை வெடித்தது. அமளிக்கு மத்தியில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., பெண் எம்.பி., பங்னான் கோன்யக், ''என்னிடம் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு ராகுல் என்னை மிரட்டினார். பெண் எம்.பி.,யான என்னிடம் இவ்வாறு கண்ணியமற்ற முறையில் அவர் நடந்து கொண்டது எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. இதுகுறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.

சபை முன்னவர் நட்டா, ''காங்கிரஸ் முற்றிலும் அம்பலமாகிவிட்டது. காயமடைந்த இரு எம்.பி., க்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண் எம்.பி., என்றும் பாராமல் ராகுல், அவரை தள்ளிவிட முயற்சி செய்துள்ளார். பார்லிமென்டை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துகிறது. எனவே, அவர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும்,'' என்றார்.

தி.மு.க., - எம்.பி., சிவா, ''இங்கு, ஒரு பக்கத்து கதை மட்டுமே சொல்லப்படுகிறது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், அந்த தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். பா.ஜ., கூறுவது போல் அங்கு எதுவும் நடக்கவில்லை. பெண் என்றில்லை, எல்லாரையுமே நாங்கள் மதிக்கிறோம்,'' என்றார்.

இருப்பினும் அமளி அதிகமாகவே வேறு வழியின்றி ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, பா.ஜ., தலைவர்கள் அனுராக் தாக்குர், பன்சுரி சுவராஜ், ஹேமங் ஜோஷி ஆகியோர் பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். பா.ஜ., - எம்.பி.,க்கள் முகேஷ் ராஜ்புத் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கியை ராகுல் தள்ளிவிட்டதில் அவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, ராகுல் மீது கொலை முயற்சி புகார் அளித்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட போலீசார், ராகுலை முதல் குற்றவாளியாக சேர்த்து வழக்குப்பதிவு செய்தனர்.

என்னையும் தள்ளி விட்டனர்!

பார்லிமென்ட் உள்ளே செல்ல நான் முயற்சித்தபோது பா.ஜ., - எம்.பி.,க்கள் என்னை தடுத்து நிறுத்தினர். என்னை தள்ளிவிட்டதுடன், மிரட்டல் விடுத்தனர். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோரையும் தள்ளிவிட்டனர். இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

நிலைகுலைந்து விட்டேன்!

பா.ஜ., - எம்.பி.,க்கள் என்னை தள்ளிவிட்டதும் நான் நிலைகுலைந்து மகர் துவார வாயிலின் முன், தரையில் அமர்ந்துவிட்டேன். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி லோக்சபா சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம்.மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

போலீசில் காங்., புகார்

காங்கிரஸ் எம்.பி.,க்கள் திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், ராஜிவ் சுக்லா, பிரமோத் திவாரி ஆகியோர் பார்லிமென்ட் தெரு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். அப்போது, துணை கமிஷனர் தேவேஷ் குமாருடன் பா.ஜ., - எம்.பி.,க்கள் பேசிக்கொண்டிருந்தனர். இதனால், உதவி கமிஷனர் அறையில் காங்., - எம்.பி.,க்கள் காத்திருந்தனர். அதன் பின் அவர்கள் அளித்த புகாரில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பா.ஜ., - எம்.பி.,க்கள் தள்ளிவிட்டதாகவும், அவர் மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும் காங்., - எம்.பி.,க்கள் புகார் அளித்தனர்.அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐ.சி.யூ.,வில் எம்.பி.,க்கள்

காயமடைந்த எம்.பி.,க்கள் பிரதாப் சாரங்கி, 69, முகேஷ் ராஜ்புத், 56, ஆகியோர் உடனடியாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாரங்கி நெற்றியின் இடதுபுறத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டதில் ரத்தம் ஊற்றியது. அந்த இடத்தில் தையல் போடப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜ்புத்திற்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை அழைத்து வரும்போது இருவருக்குமே ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சி.டி., ஸ்கேன் மற்றும் இதய பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இரு எம்.பி.,க்களையும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்தார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்