பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள்; த.வெ.க.,
18 கார்த்திகை 2024 திங்கள் 11:39 | பார்வைகள் : 245
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகம் எனும் தனது கட்சியை நடிகர் விஜய் முன்னெடுத்துச் செல்கிறார். இதற்காக, கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை, மிகவும் பிரமாண்டமாக நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தங்களின் கொள்கை, கோட்பாடுகளை வெளியிட்ட த.வெ.க., தலைவர் விஜய், தங்களின் அரசியல் எதிரி யார் என்பதையும் அறிவித்தார். அதாவது, தி.மு.க.,வையே முழுக்க முழுக்க அவர் எதிர்த்து பேசினார். ஆனால், அ.தி.மு.க., பற்றி விஜய் எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. மேலும், 2026ல் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்க தயார் என்றும், ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.
இதன் மூலம், தி.மு.க.,வுக்கு எதிராக ஓர் அணியை திரட்ட விஜய் முடிவு செய்திருப்பது உறுதியானது. அ.தி.மு.க., பற்றி மாநாட்டில் விஜய் ஏதும் பேசாததால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. அதேபோல, த.வெ.க.,வை விமர்சிக்கக் கூடாது என்று இ.பி.எஸ்., வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து தமது உரையில் கட்சியின் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி, தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
அ.தி.மு.க.,வுடன் த.வெ.க., கூட்டணி என்று வெளியாகி வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது. த.வெ.க.,வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. மக்களின் பேராதரவோடு பெரும்பான்மையுடன் வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள், எனக் குறிப்பிட்டுள்ளார்.