எதிர்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை!
20 கார்த்திகை 2024 புதன் 03:40 | பார்வைகள் : 566
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், வரும் 25ம் தேதி துவங்க உள்ளதை அடுத்து, 24ல் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை அடுத்து, கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், வரும் 25ம் தேதி துவங்கி டிச., 20 வரை நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டார்.
இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற அரசு முனைப்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
வக்பு வாரிய திருத்த மசோதா தற்போது, பார்லி., கூட்டுக்குழு பரிசீலனையில் உள்ளது. இந்த இரண்டு மசோதாக்களையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தாலும், அதை நிறைவேற்றியே தீருவோம் என, பிரதமர் மோடி திட்ட வட்டமாக தெரிவித்து வருகிறார்.
புதிய வேகம்
இதுகுறித்து அவர் சமீபத்தில் பேசுகையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட புதிய வேகம் அளிக்கும்' என்றார்.
இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு முயற்சித்தால், சபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபடுவர். காரசாரமான விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது.
எனவே, சபையில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை கோரியும், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி எதிர்க்கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தவும், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரை, வரும் 25ல் கூட்ட ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, அதற்கு முந்தைய நாளான 24ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ஏற்பாடு
பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதான கமிட்டி அறையில், காலை 11:00 மணிக்கு கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத் தொடர் டிச., 20ல் நிறைவடையும்; நவ., 26ல், 75வது அரசியல்சாசன தினம் கொண்டாடப்படுகிறது. பார்லி., யின் மத்திய அரங்கமான சம்விதான் சதனில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.